விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்

மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட, இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார்.

கடந்த 15 வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது. ""உயிரியல் இரசாயன இழையங்களைப் பயன்படுத்தி முழுமையான செயற்கை இருதயம் உருவாக்கப்படுவது உலகில் இதுவே முதற்றடவையாகும்'' என மேற்படி இருதயத்தை உருவாக்கியுள்ள உயிரியல் மருத்துவக் கம்பனியான "கார்மட்' இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பற்றிக் கொலம்பியர் தெரிவித்தார்.

""இந்த உயிரியல் இரசாயன இழையங்களானது விலங்குகளின் இழையங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டமையால் அவற்றை மனித உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது'' என அவர் கூறினார். கார்மட் நிறுவனமானது, பொது மற்றும் இராணுவ பாவனைக்கான விமானங்கள், எறிகணைகள், விண்கலங்கள் என்பனவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தி வரும் விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்பு கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் 15 புதிய செயற்கை இருதயங்களை உருவாக்க கம்பனி திட்டமிட்டுள்ளது. இந்த இருதயங்களை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மனிதர்களுக்கு பொருத்தும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1980 களிலிருந்து செயற்கை இருதயங்களை உருவாக்குவதற்கான அநேக ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் அநேகமானவை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வரை நோயாளியின் உயிரை தக்க வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன.

எனினும், அவை எதுவுமே நீண்டகால அடிப்படையில் மாற்று இருதயமாக இயங்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. அந்த செயற்கை இருதயங்களைப் பொருத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை எதிர் விளைவுகள் மற்றும் குருதி உறைதல் போன்ற பிரச்சினைகள் காரணமாகவே அவற்றினை நோயாளிக்கு நிரந்தரமாக உபயோகிப்பது சாத்தியமற்று இருந்தது. ஆனால், இப்புதிய மிருக இழையங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை இருதயமானது குருதி உறையும் அபாயம் குறைந்தது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

No comments: