அரிய பறவையின டைனோஸரின் எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிப்பு

பிஸாரி என்றழைக்கப்படும் பறவையின டைனோஸரின் எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி டைனோஸரானது தற்போதைய பறவைகள் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். 4 நாடா உருவுடைய வால் பகுதி இறக்கையுடன் பறவையையொத்ததாக காணப்படும் இந்த டைனோஸர்களிடம்,

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பறக்கும் டைனோஸர்களில் காணப்படுவது போன்ற பறப்பதற்கான எதுவித அம்சங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

"எபிடெஸிப்ரெரிக்ஸ்" என்ற விஞ்ஞானப் பெயருடைய மேற்படி டைனோஸர், தொடர்பான விபரங்கள் "நேச்சர்" விஞ்ஞான இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பானது தற்போதைய பறவைகள் தோற்றம் பெற்றதற்கு முன்னரான கூர்ப்பு மாற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்ய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஆய்வானது சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த புசெங் ஷாங் மற்றும் ஸிங்ஸு ஆகிய துறைசார் நிபுணர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. சீனாவில் லெய் யொனிங் மாகாணத்தில் மேற்படி புதிய பறவையின டைனோஸர் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடத்திலிருந்து உலகிலேயே மிகப் பழைமையான "ஆர்செயியோப்தெரிக்ஸ்' என்ற பறக்கும் ஆற்றலுள்ள பறவையின டைனோஸரின் எச்சங்கள், ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த டைனோஸர் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பிஸாரி எனப் பெயரிடப்பட்டுள்ள பறக்கும் ஆற்றலற்ற இந்த புதிய வகை டைனோஸரானது, மேற்படி "ஆர்செயியோப்தெரிக்ஸ்' டைனோஸர் வாழ்ந்த காலத்தை விட முற்பட்ட காலத்தில் வாழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டைனோஸரின் எச்சங்களில் 152 மில்லியன் முதல் 168 மில்லியன் வரையான ஆண்டுகளுக்கு முற்பட்ட ரேடியோ காபன் கூறுகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

No comments: