அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஒபாமா! : அமோக வெற்றி பெற்று சாதனை : புஷ் கட்சிக்கு பெருத்த அடி

வாஷிங்டன் : அமெரிக்காவின் 44வது அதிபராக, ஆப்ரிக்க வமிசாவளியைச் சேர்ந்த 47 வயது பராக் ஒபாமா அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான் மெக்கைன் தோல்வி அடைந்தார். அதிபர் புஷ் பின்பற்றிய தவறான கொள்கைகளுக்கு அடியாக இம்முடிவு அமைந்தது. அமெரிக்க நடைமுறைகளின்படி, 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கிறார்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும்(47), குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைனும்(72) போட்டியிட்டனர். இவர்களைத் தவிர சிறிய கட்சிகளின் சார்பில் சக்பால்ட்வின், சிந்தியா மெக்கினி, சுயேச்சை வேட்பாளர் ரால்ப் நடார் ஆகியோரும் களத்தில் இருந்தனர். இருப்பினும், பராக் ஒபாமா மற்றும் ஜான் மெக்கைன் இடையே தான் கடும் போட்டி நிலவியது. அமெரிக்க அதிபரை மக்கள் நேரடியாக ஓட்டளித்து தேர்ந்தெடுப்பதில்லை. ஒவ்வொரு மாகாணத்திலும் மாநில மக்கள்தொகை அடிப்படையில், தேர்தல் சபை உறுப்பினர்கள் உண்டு. அந்த உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 538. இவற்றில், 270 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுபவரே அமெரிக்க அதிபராவார். ஆனால், பராக் ஒபாமா எதிர்பார்த்ததை விட அதிகமாக, 338 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைன், 159 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 44வது அதிபராகிறார் ஒபாமா. அத்துடன், அமெரிக்காவின் 232 ஆண்டுகால வரலாற்றில் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையை பெறுகிறார். இதன்மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார்.

கென்யாவைச் சேர்ந்த தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்த பராக் ஒபாமாவுக்கு மிச்சேல் என்ற மனைவியும், மாலியா, சாஷா என்ற மகள்களும் உள்ளனர். தற்போது இல்லினாய்ஸ் மாகாண கவர்னராக இருக்கும் ஒபாமா, சட்டம் படித்தவர். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிக நீண்ட நாட்கள் மற்றும் அதிக செலவில் நடந்த தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது. பராக் ஒபாமா அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதிபர் பதவியில் இருப்பார். "புதிய மாறுதல்' என்று அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்து வெற்றி பெற்ற இவருக்கு, துணை அதிபராக உதவப் போகும் ஜோ பிடன் வெளிவிவகாரக் கொள்கைகளில் நிபுணர். கடந்த 2004ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஒகியோ, புளோரிடா, வெர்ஜினியா, ஐயோவா, நியூ மெக்சிகோ, நிவேடா மற்றும் கொலராடோ ஆகிய மாகாணங்களில் அதிபர் புஷ் வெற்றி பெற்றிருந்தார். அவர் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், இம்முறை அந்த மாகாணங்களில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமாவுக்கு ஆதரவாக ஓட்டுக்கள் விழுந்துள்ளன. அத்துடன் ஜனநாயக கட்சியினரின் ஆதிக்கம் குறைந்த மாகாணம் என நம்பப்படும் பென்சில்வேனியாவிலும் ஜான் மெக்கைனுக்கு குறைவான ஓட்டுக்களே விழுந்தன.

ஜான் மெக்கைன் ஆட்சிக்கு வந்தால், அதிபர் புஷ் ஆட்சியே மூன்றாவது முறை தொடர்வதாக கருதலாம். அவரின் கொள்கைகளையே ஜான் மெக்கைன் பின்பற்றுவார் என, ஒபாமா பிரசாரம் செய்தார். அந்தப் பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போதைய அதிபர் புஷ்ஷின் பதவி, 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அன்றைய தினம் ஒபாமா அதிபராக பதவியேற்பார். அமெரிக்காவில் இன ரீதியாக சமத்துவம் உருவாக வேண்டும் என, சிவில் உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர்சிங் விரும்பினார். அவரின் விருப்பம், ஒபாமாவின் வெற்றி மூலம் நிறைவேறியுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் சிகாகோவில் தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பராக் ஒபாமா கூறியதாவது: அமெரிக்காவில் எல்லாம் நடக்குமா, ஜனநாயகத்தின் கனவுகள் அங்கே இனி நனவாகுமா என்ற சந்தேகம் கொண்டவர்களுக்கு இந்த வெற்றி நல்ல பதிலை தந்துள்ளது. நமது ஜனநாயகத்தின் அதிகாரம் பற்றி கேள்வி எழுப்பியவர்களுக்கு எல்லாம் இந்த இரவில் பதில் கிடைத்துள்ளது. இவ்வாறு ஒபாமா கூறினார். ஒபாமா தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசுவதற்கு முன், அவருக்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜான் மெக்கைன் வாழ்த்து தெரிவித்தார். ஒபாமா வெற்றி பெற்றதை அறிந்தவுடன் வெள்ளை மாளிகை முன் குவிந்த கருப்பினத்தவரும், வெள்ளையர்களும் வெற்றியை கொண்டாடினர். டிரைவர்கள் ஆங்காங்கே தெருக்களில் வாகனங்களை நிறுத்தி ஒலி எழுப்பினர். அத்துடன் வாழ்த்தும் தெரிவித்தனர். அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ள நகரங்களிலும் இதேபோன்ற கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. இதேபோல், பிரதமர் மன்மோகன் சிங் உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தலைவர்களும் ஒபாமாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஆதரவாக 52 சதவீத ஓட்டு: செனட்டிலும் அபாரம் : அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், பராக் ஒபாமா 52 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைன் 47 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் 50.7 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார். மொத்த தேர்வுக் குழு உறுப்பினர்களில் 286 பேரின் ஆதரவைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான்கெரி 48.3 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார். அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 435. இவற்றில் பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியினர் 251 இடங்களைப் பிடித்துள்ளனர். குடியரசு கட்சியினர் 171 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், செனட் சபை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100. இதில், ஜனநாயக கட்சிக்கு 56 இடங்களும், குடியரசு கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் : "நாட்டின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் வாழ்வில் மிக முக்கியமான பயணத்தை மேற் கொள்ள உள்ளீர்கள். சந்தோஷம் அடையுங்கள்'.

குடியரசு கட்சி வேட்பாளர் மெக்கைன் : கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைத்து அமெரிக்கர்களும் பராக் ஒபாமாவுக்கு ஆதரவு தர வேண்டும். இக்கட்டான நிலைமையில் இருந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவ வேண்டும்.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங்: உங்கள் வெற்றி அமெரிக்க மக்களை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு செல்லும் உங்களது வியத்தகு பயணம் இந்திய - அமெரிக்க உறவை வலுப்படுத்தும்.

தமிழக முதல்வர் கருணாநிதி: தங்களை தேர்வு செய்ததன் மூலம் அமெரிக்க மக்கள் மாற்றத்தை விரும்பி ஒளிமயமான எதிர்காலத்தை தேர்வு செய்துள்ளனர். அமெரிக்காவின் அதிபராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் சாதித்த சாதனையாளர்கள்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அடுத்த அதிபராக ஒபாமாவை அடையாளம் காட்டியுள்ளன. இந்நிலையில் 2008க்கு முன் நடந்த தேர்தலில் சாதித்த சாதனையாளர்கள் பற்றிய விபரம் இதோ: 2004 ம்ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஜான் எப். கெரியை 286- 251 என்ற எலக்டோரல் ஓட்டுகள் கணக்கில் வென்றார். 2000ம் தேர்தலில் ஜார்ஜ் புஷ்271-266 என்ற ஓட்டுகள் கணக்கில் ஜனநாயக கட்சியின் ஆல்பர்ட் அல்கோரை வெற்றி கண்டார். 1996 ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் வில்லியம் கிளிண்டன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜெ. டோலை 379-159 என்ற ஓட்டுகள் கணக்கில் வென்றார். இதே போல் 1992ம் நடந்த தேர்தலிலும் கிளிண்டன் 370-168 என்ற ஓட்டுகள் கணக்கில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்சின் தந்தை ஜார்ஜ் எச். புஷ்சை வென்றார். 1988 நடந்த தேர்தலில் குடியரசு கட்சியின் ஜார்ஜ் எச். புஷ் 426-111 என்ற ஓட்டகள் கணக்கில் ஜனநாயக கட்சியின் மைக்கேல் டுகாகிஸ்சையும், 1984 தேர்தலில் குடியரசு கட்சியின் ரொனால்டு ரீகன் 525-013 என்ற கணக்கில் வால்டர் எப். மாண்டேல் லையும்வெற்றி கண்டனர். 1980 தேர்தலிலும் ரொனால்டு ரீகனே வெற்றி வாகை சூடினார். இம்முறை ஜனநாயக கட்சியின் ஜிம்மி கார்டரை 489-049 என்ற ஓட்டுகள் கணக்கில் அவர் வீழ்த்தினார். 1976 தேர்தல் ஜிம்மி கார்டரின் முறை. இம்முறை ஜனநாயக கட்சியின் ஜிம்மி கார்டர் 297-240 என்ற கணக்கில் ஜெரால்டு போர்டை வென்றார்.1972 தேர்தலில் குடியரசு கட்சியின் ரிச்சர்டு நிக்சன் 520-017 என்ற ஓட்டுகள் கணக்கில் ஜார்ஜ் மெக்கவர்னை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வென்று சாதனை புரிந்தார்.1960ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜான் எப். கென்னடி303-219 என்ற ஓட்டுகள் கணக்கில் ரிச்சர்டு நிக்சனை வென்றார். அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில் 4 அதிபராகிய சாதனை ஜனநாயக கட்சியின் பிராங்ளின் ரூஸ்வெல்டிடம் உள்ளது. இவர் 1932, 1936, 1940, 1944 முறையே 472, 523, 449, 432 ஆகிய எலக்டோரல் ஓட்டுகளைப் பெற்று அசைக்க முடியாத அதிபராக விளங்கினார்.

No comments: