சந்திராயன் விண்கலத்தின் அடுத்த சாதனை: நிலாவில் தேசிய கொடி தடம் பதித்தது

சந்திராயன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம், தேசிய கொடியுடன் நிலாவில் இறங்கியது.

ஆய்வுக்கலம்

நிலாவை பற்றி ஆராய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திராயன் விண்கலம், இறுதியாக நேற்றுமுன்தினம் அதன் இறுதி சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதாவது, தற்போது நிலாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் சந்திராயன் சுற்றிக் கொண்டிருக்கிறது.

நிலாவை பற்றி ஆய்வு செய்வதற்காக, சந்திராயனில் 11 விஞ்ஞான ஆய்வு கருவிகள் பொருத்தி அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் `மூன் இம்பாக்ட் புரோப்' (எம்.ஐ.பி.) எனப்படும் ஆய்வுக்கலமும் அடங்கும். 35 கிலோ எடை கொண்ட இது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.

நிலாவில் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வுக்கலத்தை இறக்க என்ன தொழில்நுட்பம் தேவைப்படும் என்பதை கண்டறிய இந்த ஆய்வுக்கலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நிலாவை அருகில் இருந்து படம் பிடித்து ஆய்வு செய்வதற்காகவும் இது பயன்படுத்தப்பட உள்ளது. இதில் வீடியோ கேமரா, சி-பாண்ட் ராடார், ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆகிய கருவிகள் உள்ளன.

தேசிய கொடி

இந்த ஆய்வுக்கலத்தின் நான்கு பக்கங்களிலும் இந்திய தேசிய கொடி வரையப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காக இந்த ஆய்வுக்கலம், நிலாவில் கால் பதிக்கும்போது, அதனுடன் தேசிய கொடியும் நிலாவில் கால் பதிக்க வேண்டும் என்பதே இதற்கான நோக்கம்.

அதன்படி, நேற்று இரவு 8 மணிக்கு மேல், சந்திராயன் விண்கலத்தில் இருந்து எம்.ஐ.பி. ஆய்வுக்கலம் விடுவிக்கப்பட்டது. அது 25 நிமிட நேரம் பயணம் செய்து இரவு 8.31 மணிக்கு நிலாவை அடைந்தது. நிலாவின் நிலப்பரப்பில் தடம் பதித்தது. அதன்மூலம் முதன்முறையாக இந்திய தேசிய கொடியும் நிலாவில் தடம் பதித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய ïனியன் ஆகிய நாடுகள், ஏற்கனவே தங்களது தேசிய கொடியை நிலாவில் இடம்பெறச் செய்துள்ளன. அதைத்தொடர்ந்து நிலாவில் தேசிய கொடியை தடம் பதித்த பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திராயனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மற்ற 10 விஞ்ஞான ஆய்வுக்கருவிகளும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சந்திராயன் விண்கலம், 2 ஆண்டுகள் தங்கி இருந்து ஆய்வு செய்யும்.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

நிலாவில் தேசிய கொடி தடம் பதித்த நிகழ்ச்சியை பெங்களூரில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட விஞ்ஞானிகளும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் பார்த்துக் கொண்டிருந்தனர். தேசிய கொடி கால் பதித்தவுடன் அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இச்சம்பவம் நிலாவில் இந்தியா நுழைந்து விட்டதை குறிப்பதாக ஒரு விஞ்ஞானி கூறினார்.

திட்டமிட்டபடி, சந்திராயன், ஆய்வுக்கலத்தை விடுவித்ததாகவும், நிலாவின் தென்துருவத்தில் ஆய்வுக்கலம் இறங்கி இருப்பதாகவும் மாதவன் நாயர் நிருபர்களிடம் தெரிவித்தார். தாங்கள் இந்தியாவுக்கு நிலாவையே கொடுத்து இருப்பதாகவும் அவர் கூறினார். அப்போது அப்துல் கலாம் உடனிருந்தார்.

நிலாவை நோக்கி சென்று கொண்டிருந்தபோதே, எம்.ஐ.பி. ஆய்வுக்கலம் நிலாவை படம் பிடித்து தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைத்தது. இப்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.

சோனியா வாழ்த்து

இச்சாதனைக்காக விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியதாவது:-

இந்தியாவின் விண்வெளி திட்டத்தை 61 ஆண்டுகளுக்கு முன்பு நேரு தொடங்கி வைத்தார். தொழில்நுட்பத்தில் முன்னேறிய இந்தியாவை காண வேண்டும் என்று அவர் கனவு கண்டார். நிலாவில் தேசிய கொடியை தடம் பதித்ததன் மூலம் நேருவின் பிறந்த நாளில் அவரது கனவு நனவாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: