சாதனைப் பயணம் சந்திக்கவுள்ள சவால்கள்.....

புதியதோர் அரசியலுக்கான பக்கமொன்றைப் புரட்டுவோம் என்ற அறைகூவலுடன் ஆரம்பமான இலட்சியப் பயணம் இன்று அமெரிக்காவின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தையே ஆரம்பித்துள்ளது.

"மாற்றம்?" என்ற தொனிப் பொருளுடன் ஆரம்பிக்கப்பட்ட பிரசாரங்கள் இன, மத,நிற பேதமின்றி அனைவரையும் ஒரே திசையில் சிந்திக்க வைக்கும் அளவுக்கு அமெரிக்க மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா நாட்டின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியென்ற வரலாற்றுப் பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு 45 வருடங்களின் பின்னர் நனவாகியுள்ளது. அத்துடன் 1950களில் நிலவிய இன ஒதுக்கல் சர்ச்சைக்குப் பின்னர் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற முழுமையான மாற்றத்தை பிரதிபலித்துள்ளது.

நாட்டின் சனத்தொகையில் 13 வீதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இனத்தவரை அமெரிக்கர்கள் தமது தலைவராகத் தெரிவு செய்திருப்பதன் மூலம் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றினைக் கொண்டவை என மார்தட்டும் நாடுகள் செய்ய முடியாததை வெறும் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்த ஐக்கிய அமெரிக்க குடியரசு சாதித்திருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்கா அழைத்துவரப்பட்டவர்களே, கறுப்பினத்தவர்கள்.

கூட்டம் கூட்டமாக விற்பனை செய்யப்பட்டு கூனிக் குறுகிக் கிடந்த இந்த இனத்திற்கு புதியதொரு உயிரோட்டத்தை ஏற்படுத்தியவர் அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதி ஏபிரஹாம் லிங்கன். இவர் ஜனாதிபதியாக இருந்தபோதே அடிமை வியாபாரத்திற்கு தடைவிதித்தார். எனினும், இன ஒதுக்கலுக்கெதிரான எபிரஹாம் லிங்கனின் போராட்டங்கள் கறுப்பினத்தவர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தவில்லை.

இதன் பின்னர் கறுப்பின உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் உயிர் இனவெறியர்களாலேயே பறிக்கப்பட்டது. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இன ஒருதுக்கலுக்கு எதிராக போராடிய ஒரு இனத்தைச் சேர்ந்தவர் இன்று ஏகோபித்த ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

?பராக்? என்பதற்கு ஆபிரிக்க மொழியில் ?ஆசிர்வதிக்கப்பட்டவர்? என்ற அர்த்தமாம். இந்த மொழியின் அர்த்தத்திற்கு வரலாற்று சாதனை மூலம் வலு சேர்த்திருக்கிறார் ஒபாமா. எனினும், ஒபாமா கடந்துவந்த பாதை மலர் தூவப்பட்டதல்ல.

காதலால் ஒன்றிணைந்த ஆபிரிக்க கறுப்பினத்தவரான பராக் ஹுசைன் ஒபாமாவுக்கும் அமெரிக்க வெள்ளையினப் பெண்மணியான ஆன் டன்ஹம்முக்கும் மகனாகப் பிறந்த ஒபாமாவுக்கு மிகக் குறைந்த காலமே பெற்றோரின் அரவணைப்புக் கிடைத்தது. ஒபாமாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன் பின்னர் சொந்த நாடான கென்யாவில் வாழ்ந்து வந்த தந்தையை 1982இல் அவர் வாகன விபத்தொன்றில் கொல்லப்படுவதற்கு முன்னர் தனது 10ஆவது வயதில் ஒரு தடவை மட்டுமே ஒபாமா சந்தித்துள்ளார்.

இதற்கிடையில் ஒபாமாவின் ஆறாவது வயதில் தாயார் ஆன் டன்ஹம் இந்தோனேசியர் ஒருவரை மறுமணம் செய்தமையால் ஜகார்த்தாவுக்கு குடிபெயர்ந்த ஒபாமா 10 வயது வரை அங்கு கல்வி கற்றார்.

எனினும், 10ஆவது வயதில் மீண்டும் ஹவாயிலுள்ள ஹொசொலுலுள்ள தாய்வழிப் பாட்டியுடன் வாழும் நிலைக்கே ஆளான ஒபாமா பாட்டியின் உதவியுடனேயே உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

தனது இளமைக் காலம் பற்றி அவர் எழுதிய முதல் புத்தகமான ?ட்ரீம்ஸ் ஃப்றம் மை ஃபாதர்? என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிடுகையில், தனது இளமைக்கால வாழ்க்கை மிகவும் குழப்பகரமானதாக இருந்ததாகவும் இரு இன பாரம்பரிய உணர்வை உருவாக்க தான் கடுமையாக போராடியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், கறுப்பு மற்றும் வெள்ளையின கலாசாரங்கள் இயல்பாகவே ஒபாமாவின் இரத்தத்தில் கலந்திருந்தமையால் இரண்டு சமூகங்களினதும் கோணங்களை புரிந்து கொள்ள முடிந்ததுடன் பின்னர் அரசியலில் விரிவான இலக்கொன்றை நிர்ணயிக்க உதவியதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர இளைஞரான ஒபாமா உயர்கல்வி கற்கும் காலத்தில் மரிஜுவானா, கொக்கெயன் மற்றும் மதுபானம் என்பவற்றிற்கு சிலகாலம் அடிமையாகியிருந்தமையை இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் ஒபாமா ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வியைத் தொடர்ந்து அரசியல் விஞ்ஞானம், சர்வதேச உறவுகள் மற்றும் சட்டத்துறை என்பவற்றில் முக்கிய பட்டங்களைப் பெற்ற ஒபாமா பின்னர் சமூக சேவையின் பால் தனது கவனத்தை திசை திருப்பினார்.

சட்ட மன்றங்களின் ஆலோசகர், பணிப்பாளர் மற்றும் சட்ட விரிவுரையாளர் என பல பதவிகளை வகித்த ஒபாமா 1996இல் இலினொய்ஸ் மாநில செனட்டராக தெரிவானார். இதன் பின்னர் பல அதிரடி பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கியதுடன் தமது வரிப்பணத்தின் ஒவ்வொரு டொலரும் எந்தத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் வீட்டிலிருந்தவாறே இணையத்தளங்களின் மூலம் அறிந்துகொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அரசியலின் பக்கம் தீவிர கவனத்தைச் செலுத்திய ஒபாமா 2007 பெப்ரவரியில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத் திட்டம் குறித்து அறிவித்ததுடன் நீண்டகால மற்றும் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் இன்று வெற்றிக் கம்பத்தில் ஏறியுள்ளார்.

அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் 1858இல் ஏபிரஹாம் லிங்கன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்திய இலினொயிஸ் மாநிலத் தலைநகரிலுள்ள சட்டப் பேரவைக் கட்டடத்திற்கு வெளியே இருந்துதான் புதியதோர் அரசியலுக்கான பக்கமொன்றைப் புரட்டுவோம் என்ற அறைகூவலுடன் ஒபாமா வேட்பாளர் நியமனத்திற்கான பிரசாரத்தை ஆரம்பித்தார்.

இதன்போது கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்காவின் முக்கிய கட்சியொன்றின் வேட்பாளராக முடியுமா என்ற கேள்வி உலகெங்கும் எதிரொலித்தது.

ஏனெனில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு முன்னரும் சில ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகள் முயற்சித்த போதும் இது அவர்களுக்கு வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப் பிரபலமான முன்னாள் முதல் பெண்மணியை தோற்கடித்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தை ஒபாமா பெற்றபோது ஒபாமாவின் பக்கம் முழுக் கவனத்தையும் திருப்பிய உலகம் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிருக்கும் இந்த முன்னேற்றம் முதல் கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையை ஒபாமா பெறும் அளவிற்கு விரிவடையுமா என்பதை ஆர்வத்துடன் அவதானித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் எதுவும் சாத்தியம் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் ஒபாமா.

அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) 45 வருடங்களுக்கு முன்னர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்திய ஆகஸ்ட் 28இல் ஜனநாயக வேட்பாளருக்கான நியமனத்தைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய ஒபாமா ?எனக்கு ஒரு கனவு இருக்கிறது? என மார்ட்டின் லூதர் கிங் அன்று கண்ட கனவை நினைவுகூர்ந்தார். கறுப்பின சிறுவர்களும் வெள்ளையின சிறுவர்களும் சகோதரர்களாக என்றாவது ஒருநாள் கைகோர்த்து நிற்க வேண்டுமென்பதே மார்ட்டின் லூதர் கிங் 45 வருடங்களுக்கு முன்னர் கண்ட கனவாகும்.

கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒபாமாவின் பிள்ளைகளும் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோபைடனின் பிள்ளைகளும் ஒன்றாக மேடையேறியதன் மூலம் மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு நனவாகியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் நியமனத்திற்கான ஆரம்ப பிரசாரங்களிலிருந்தே கடும் போட்டியை எதிர்கொண்ட ஒபாமா ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிநாள் வரை எவ்வித தொய்வுமின்றி பிரசாரத்தை கடுமையாக முன்னெடுத்தார்.

ஒபாமாவின் கவர்ச்சிகரமான பேச்சு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிதானம் விவாதத்திற்கான விடயங்களை எவ்வித தடுமாற்றமுமின்றி தெளிவாக விளக்கும் திறன் மற்றும் இளமைத் துடிப்பு அதிர்ஷ்டம் என்பவற்றுக்கு முன்னால் அவருக்கெதிராக முன்வைக்கப்பட்ட அவர் ஒரு முஸ்லிம், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர், போதிய அனுபவமற்றவர் போன்ற குற்றச்சாட்டுகள் காற்றில் அகப்பட்ட துரும்புகளாக அடிபட்டுப் போயின. கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அவர் வரலாற்றை மாற்றியமைத்துள்ள போதும் அவர் மீதான எதிர்பார்ப்புகளும், எதிர்கொள்ளவேண்டிய சவால்களும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அதிகரித்தவண்ணமே உள்ளன.

வெற்றியின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா:-

எமக்கு முன்னாலுள்ள பாதை மிக நீண்டது. மிகவும் உயரமான இடத்தை நாம் அடைய வேண்டியுள்ளது. ஒரு வருடத்தில் அல்லது ஒரு தவணைக் காலத்தில் நாம் அதனை எட்ட முடியாமல் போகலாம். ஆனால், நாம் அந்த இடத்தை எட்டுவோம் என்றும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்களாகிய நாம் அந்த இலக்கை எட்டுவோமென நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

ஒபாமாவின் வெற்றி உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையை அளிப்பதற்கான சமிக்ஞை என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள இனவெறி ஆட்சிக்கெதிரான முன்னாள் போராளி நெல்சன் மண்டேலா உன்னத இடத்திற்கு உலகை மாற்ற வேண்டுமென்ற கனவைக் காண்பதற்கான துணிச்சல் உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டுமென்பதை ஒபாமாவின் வெற்றி நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெரும்பாலான உலகத் தலைவர்கள் ஒபாமாவின் வெற்றியை புதியதொரு சகாப்தத்தின் ஆரம்பமென வர்ணித்துள்ளனர்.

எனவே ஒட்டுமொத்த உலகினதும் எதிர்பார்ப்புடன் பதவியேற்கப் போகும் ஒபாமாவுக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.

ஒபாமாவின் வெற்றியுடன் அமெரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்து விட்டதாக கருதமுடியாதென தெரிவிக்கும் அரசியல் அவதானிகள் அவர் ஒரு மாற்றத்திற்கான முகவராக மட்டுமே வரலாற்றில் நினைவு கூரப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளனர். பிரசாரத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே ஒபாமாவைக் கொலை செய்ய முயன்ற மேலாதிக்கவாதிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கான உயிர் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து கொண்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை மாற்றத்திற்கான அடையாளமாக தன்னை நிலைநாட்டுவது ஒபாமாவுக்கு இலகுவான விடயமாக இருக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி புஷ்ஷின் கொள்கைகள் மீதான வெறுப்பே குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் தோற்கடிக்கப்பட்டதற்கான பிரதான காரணமாக விளங்குகிறது. மாற்றம் என்ற சுலோகத்தின் மூலம் இளம் தலைமுறையினரின் ஆதரவை வென்றெடுத்துள்ள ஒபாமா நாடு எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகளான பொருளாதார வீழ்ச்சி, மற்றும் இரு நாடுகள் மீதான படையெடுப்பால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தி என்பவற்றை ஒபாமா எவ்வாறு கையாளப் போகிறார் என்பதற்கான பதிலை முழு உலகமுமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

தேர்தல் காலத்தில் ஒபாமாவினால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளான வரி அறவீடுகளை குறைத்தல், சுகாதார நலத் திட்டங்களை ஊக்குவித்தல், மற்றும் சம்பளக் கொடுப்பனவை அதிகரித்தல் போன்ற திட்டங்கள் பல மில்லியன் டொலர்கள் பெறுமதிவாய்ந்தவை. ஒபாமாவின் உறுதிமொழிகளில் 200,000 டொலர்களை விட குறைந்த வருட வருமானத்தைப் பெறுபவர்களுக்கான வரி அறவீட்டைக் குறைத்தல், 250,000 டொலருக்கும் அதிகமான வருமானத்திற்கான வரிவீதத்தை அதிகரித்தல், வருடத்திற்கு 65 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சுகாதார நலத் திட்டம் 18 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கல்வி முறைமைத் திட்டம் என்பன முக்கியமானவை. இவை தவிர அடுத்த தசாப்த காலத்தில் சக்தி வளத்தை அபிவிருத்தி செய்வதற்கான 150 பில்லியன் டொலர்கள் திட்டமும் முக்கியம் பெறுகிறது.

இதன் பிரகாரம் எண்ணெய்த் தேவைக்காக மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் நிலையை அடுத்த 10 வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்த ஒபாமா அடுத்த 42 வருடங்களில் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை 80 வீதமாக குறைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கைத்தொழில் வலயங்களுக்கான வரியை அதிகரித்தலோ, கூடிய வருமானம் பெறும் மக்களின் மீதான வரிச்சுமையை அதிகரித்தலோ மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.
மறுபுறத்தில் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையையும் 11 ட்ரில்லியன் டொலர்கள் தேசிய கடன்களையும் கொண்டுள்ள அமெரிக்காவில் ஒபாமா தனது திட்டங்களை அமுலாக்குவது இலகுவாக இருக்கப் போவதில்லையென பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தனது உறுதி மொழிகளை ஒபாமாவினால் நிறைவேற்ற முடியுமா இல்லையா என்பதற்கப்பால் மக்களுடனான தொடர்புகளைப் பேணுவதில் அவர் கொண்டுள்ள அதி சக்தி வாய்ந்த ஆற்றலின் மூலம் அவரது பதவிக்காலத்தில் முக்கியமான மாற்றமொன்றை ஒபாமாவினால் ஏற்படுத்த முடியுமெனக் கருதப்படுகிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை கையாள்வது தொடர்பில் கதைப்பது எளிது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவது கடினமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 16 மாதங்களுக்குள் ஈராக்கிலுள்ள படைகளை வாபஸ் பெற்று ஆப்கான் போரை முன்னிலைப்படுத்தப் போவதாக ஒபாமா உறுதியளித்துள்ளார்.

ஆனால் ஈராக் படைகளை திருப்பியழைப்பதற்கு நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் ஒபாமா இதனை எவ்வாறு கையாளப் போகிறார் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைவிட ஈரானின் அணு விவகாரம், ஆப்கான் - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினைகளை ஒபாமா எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைக் காண முழு உலகமுமே காத்திருக்கிறது. ஆனால் இவ்வாறான சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதும் மக்கள் மனதில் பதிவாகியுள்ள ஒபாமாவின் விம்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தாததுமான தீர்மானமொன்றை எடுப்பதற்கு ஒபாமாவுக்கு மேலும் பல தரப்பினதும் ஆதரவும் அதிர்ஷ்டமும் தேவையென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறத்தில் சிறுபான்மையினத் தலைவரொருவரின் ஆளுமைத் திறனை உலக அரங்கில் பேசவைக்க வேண்டிய பாரிய பொறுப்பும் ஒபாமாவுக்கு உண்டு. ஒபாமாவின் ஒவ்வொரு செயலும் கறுப்பின மக்களின் செயல்திறனோடு ஒப்பு நோக்கப்படும். இன வேறுபாடுகளை கடந்து அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதை அமெரிக்கர்கள் நிரூபித்துள்ளனர். அதேபோன்று தலைமைத்துவ திறனில் சிறுபான்மையினரும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு ஒபாமாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு உயர் பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு சிறுபான்மையினத்தவரின் செயல் திறனும் ஒபாமாவின் நடவடிக்கைகளுடன் ஒப்பிடப்படும். எனவே சிறுபான்மையினத்தவரின் தலைமைத்துவ வாய்புக்களை பிரகாசப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமானதும் செயல்திறன் மிக்கதுமான நடவடிக்கைகளை ஒபாமா மேற்கொள்ள வேண்டியது அவசியம். அபரிமிதமான வெற்றியின் மூலம் சரித்திரம் படைத்த ஒபாமா அந்த வெற்றியை தனது செயல்திறனால் தக்க வைத்துக் கொள்வதிலும் சரித்திரம் படைக்க வேண்டும். கவர்ச்சிமிக்கவர்களையே அமெரிக்கர் விரும்புவார்களென அங்கு நிலவிய எழுதப்படாத விதியையும் உடைத்தெறிந்துள்ள ஒபாமா வெள்ளை மாளிகைக்கு தெரிவான இளம் வயதானவர்களில் ஐந்தாவது ஜனாதிபதியாவார்.

அத்துடன் ஒபாமாவின் இளைய மகளான சாஷா (வயது 7) மிக இள வயதில் வெள்ளை மாளிகையில் குடியேறிய பெருமையை பெறுகிறார். எனினும் ஒபாமாவின் வெற்றி உலக அரங்கில் அவரது இரு மகள்மார் மீதும் சாதகமான தாக்கமொன்றை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பரம எதிரிகளான கியூபா மற்றும் ஈரான் கூட ஒபாமாவின் வெற்றியை வரவேற்றுள்ளன. எனவே ஒபாமா மீது அமெரிக்கர்கள் மட்டுமல்ல முழு உலகுமே பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையின சமூகத்திலிருந்து தெரிவான ஒரு தலைவரென்ற ரீதியில் ஏனைய ஜனாதிபதிகளை விட ஒபாமா உலக நாடுகளை புரிந்துகொண்டு செயற்படுவாரென அனைத்து நாடுகளும் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. ஆனால் மேலாதிக்க நோக்கங்களுக்கு இசைவாக செயற்பட இணங்காத ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்குமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் ஒபாமாவின் வெற்றி கர்வம் குறைந்த அமெரிக்காவுக்கான எதிர்பார்ப்பை உலகளாவிய ரீதியில் அதிகப்படுத்தியுள்ளது.

எனவே ?மாற்றம்? என்ற கோஷம் வெறுமனே வெற்றிக்காக பயன்படுத்தப்பட்ட அஸ்திரமாக இல்லாமல் மக்கள் விரும்பும் உண்மையான மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென்பதே ஒபாமாவின் வெற்றியை முழு மனதோடு வரவேற்ற உலக மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

- நன்றி தினக்குரல் -

No comments: