அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புதுமையும் நுணுக்கமும்

அமெரிக்காவில் நாளை 4ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளைப் பொறுத்துதான் அமெரிக்க அரசியல் நடைபெறுகிறது. தேர்தல் போட்டிகளும், வெற்றி, தோல்விகளும் இந்த இரு கட்சி அரசியல் வட்டத்திற்குள் அடங்கி இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்க செனட் சபையின் ஒவ்வோர் உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என இருந்தாலும், மூன்றில் ஒரு பகுதியினரின் தேர்தல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் மட்டுமே. அமெரிக்கக் கூட்டாட்சியின் மத்திய அமைப்புகளைத் தவிர மாநிலங்கள்தோறும் உள்ள ஆளுநர், மாநிலத்துக்கான செனட் பிரதிநிதி உறுப்பனர்களுக்கும் குறிப்பிட்ட பதவிக் காலத்திற்குப் பிறகு நடைபெறும் தேர்தல்கள், அமெரிக்க அதிபர், செனட் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல்களுடன் இணைத்து ஒரே சமயத்தில் நடத்தப்படுகின்றன.

எல்லோருக்கும் சமமான மனித உரிமைகளை உள்ளடக்கியதாக அமெரிக்க அரசமைப்புச் சட்டம் 1788ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் அமெரிக்காவில் குடியேற்றப்பட்டு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த கறுப்பு இனத்தவர்களுக்குக் குடிமக்கள் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் நீண்ட காலமாகத் தரப்படாமல் இருந்தது. கறுப்பர்களின் சமஉரிமைக்காகப் போராடிய ஆபிரகாம் லிங்கன் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றுக் கறுப்பர்களின் அடிமைத்தனத்தைச் சட்டப்படி நீக்கினாலும், நடைமுறையில் பலகாலம் கறுப்பர்களுக்குச் சமஉரிமை வழங்கப்படவில்லை. அவருக்குப் பிறகு நீக்ரோ இனத்தவர்களுக்கு உரிமைகள் தருவதற்காக நான்கு முறைகள் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இருப்பினும் வாக்களிக்கும் உரிமையைத் தடுக்கும் வகையில் பல தடைகளைத் தென் மாநிலங்கள் போட்டிருந்தன.

1964ல் வந்த 24வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்தான் தடைகளை நீக்கி நீக்ரோ மக்களுக்கும் வாக்குரிமையை உறுதிபடத் தந்தது.

தேர்தலில் நின்று அமெரிக்க செனட் சபைக்கு இதுவரை பின்வரும் மூன்று கறுப்பு இனத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: 1. எட்வர்ட் புரூக் (1967 79, மாசசூஸெட்ஸ்), 2. கரோல் மோஸ்லீ பிரௌன் (முதல் கறுப்பு இனப் பெண்மணி, 199298, இல்லினாய்ஸ்), 3. பராக் ஒபாமா (2004 முதல் இல்லினாய்ஸ்). ஆயினும் முதன்முறையாக அமெரிக்க கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அதிபருக்கான தொடக்கத் தேர்தலில் வெற்றி பெற்று இதுவரை வந்துள்ள கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இதற்கு மேலாக, அமெரிக்கத் தேர்தலில் சில புதுமைகளும், தேர்தல் நுணுக்கங்களும் வெளிப்படுகின்றன. ஜனநாயககுடியரசு ஆகிய இரு முக்கியக் கட்சிகளைத் தவிர, அமெரிக்க மாநிலங்களில் உள்ள விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. அவற்றின் சார்பாக அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பெயர்களும் ஆங்காங்கு தமக்கு ஆதரவான மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் அதிகாரபூர்வமாக வாக்குச் சீட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் அதிபர், துணை அதிபர் பதவிகளுக்கு 11 கட்சிகள் போட்டியிடுகின்றன. பின்வரும் நான்கு கட்சிகள் அதிகாரபூர்வமாகப் பல மாநிலங்களில் தேர்தலைச் சந்திக்கின்றன. 1. அரசமைப்புச் சட்டக் கட்சி, 36 மாநிலங்களில் 2. விடுதலையாளர் கட்சி, 44 மாநிலங்களில் 3. பசுமைக் கட்சி, 31 மாநிலங்களில் 4. சுயேச்சை இதர கட்சிகளின் அணி 45 மாநிலங்களில்.

11 கட்சிகள் சில மாநிலங்களில் அதிபர் துணை அதிபர் பதவிகளுக்குப் போட்டியிடுகின்றன. மற்றும் 6 கட்சிகள் அதிபர் பதவிக்கு மட்டும் போட்டியிடுகின்றன. ஆக, அதிபர் தேர்தலில் ஜனநாயக குடியரசுக் கட்சிகளைத் தவிர்த்து, 17 கட்சிகள் போட்டியிடுகின்றன.

இருப்பினும், சில மாநிலங்களில் இத்தகைய போட்டிக் கட்சிகள் வாக்குகளைப் பிரித்துக்கொள்ளும்போது, பெரிய இரண்டு கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் மாறக்கூடும். எடுத்துக்காட்டாக, ரால்ப் நேடர் அமெரிக்க அதிபர் தேர்தலில் 1992ல் இருந்து தொடர்ந்து போட்டியிட்டு வருகி?ர். 2000ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் புளோரிடா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ் பெற்ற வாக்குகள் 29,10,299; ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற வாக்குகள் 29,09,911; அந்தச் சமயத்தில் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரால்ப் நேடர் பெற்ற வாக்குகள் 96,839. அல்கோருக்கு வரவிருந்த வாக்குகளை நேடர் பிரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு அப்பொழுது வந்தது. புளோரிடா வாக்குகளில் பெரும்பான்மையைப் பெற முடியாத காரணத்தால் அல்கோர் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றார். ஆக, பல கட்சிகள் போட்டியிடுவது முக்கியமான இரு கட்சிகளின் தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும்.

அமெரிக்கத் தேர்தலில் எழுதி வாக்களித்தல் எனும் முறை இருக்கிறது. அதாவது, அங்கீகாரம் பெறாத ஒரு வேட்பாளரின் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாது. இருப்பினும், அமெரிக்கத் தேர்தல் முறையில் வாக்குச்சீட்டில் ஒரு வெற்றிடம் தரப்பட்டு அதில் வாக்காளர்கள் விரும்பனால் அங்கீகாரம் பெறாத வேட்பாளரின் பெயரை எழுதி ஆதரவு அளிக்கலாம். இவ்வாறு எழுதி வாக்களிக்கும் முறையால் அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. 1954ல் ஜேம்ஸ் ஸ்ட்ரோம் தர்மண்ட் என்பவர் அமெரிக்க செனட் சபைக்கு "எழுதி வாக்களித்தல்' முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 2008ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் 65 வேட்பாளர்கள் "எழுதி வாக்களித்தல்' முறையில் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்கத் தேர்தல் 2008ம் ஆண்டு நவம்பர் 4ல் நடைபெறும் என்று இருந்தபோதிலும் அதற்கு முன்னதாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 31 மாநிலங்களில் தேர்தல் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்குச் சட்டபூர்வமான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் அக்டோபர் 13ம் திகதி தொடங்கி அக்டோபர் 30 வரை குறிப்பிட்ட சில இடங்களில் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.

2000ம் ஆண்டு தேர்தலில் 16 சதவிகித வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தினர். 2004 தேர்தலில் 22 சதவிகித வாக்காளர்கள் முன்னதாக வாக்களித்தனர். தற்போதைய 2008 தேர்தலில் 30 சதவிகித அளவுக்கு முன்கூட்டி வாக்களிப்பவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வாக்களிப்பவரின் பெயரும், வரிசை எண்ணும், ஒளிப்படமும் தேர்தல் சாவடியில் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. முன்னதாக வாக்களிக்கும் முறையால் ஒரு வாக்காளர் பலமுறை வாக்களிக்கும் மோசடி இதுவரை எதுவும் நடைபெறவில்லை என்று தேர்தல் குழு தெரிவிக்கிறது. உடல்நலம் குன்றிய ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குக் காரில் அழைத்துவரப்பட்டால், வாக்குச்சீட்டைத் தேர்தல் அதிகாரி எடுத்துச்சென்று ரகசியமாக அவருடைய வாக்கைப் பதிவு செய்ய வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு முன்கூட்டி நடைபெறும் வாக்குப் பதிவுகளை முறையாகப் பாதுகாத்து, நவம்பர் 4ம் திகதி போடப்படும் வாக்குகளுடன் சேர்த்து ஒரே நாளில் எண்ணப்படும்.

அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ஆண்டில் வாக்காளர்கள் அதிகமாக 60 சதவிகிதத்திற்குக் குறையாமல் வாக்களிக்க முன்வருகின்றனர். அதிபருக்கான வேட்பாளருக்கு நேரடியாக வாக்காளர்கள் தம்முடைய வாக்குகளைத் தந்தாலும், கடைசியில் 540 பேர்களைக் கொண்ட தேர்தல் குழுவினர் தரும் ஆதரவை வைத்துத்தான் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபருக்கான தேர்தல் குழு என்பது அமெரிக்காவில் ஒரு வினோதமான அமைப்பு. மக்கள்தொகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் குழு உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்படுகிறார்கள். இதன்படி கலிபோர்னியா 54, டெக்ஸாஸ் 34, இல்லினாய்ஸ் 32, நியூயோர்க் 31, புளோரிடா 26 எனத் தொடங்கி அலாஸ்கா, டென்வர் போன்ற சிறிய மாநிலங்களுக்குக் குறைந்தபட்சமாக 3 உறுப்பனர்கள் தரப்படுகிறார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கலிபோர்னியா மாநிலத்தில் விழும் வாக்குகளில் 50.01 சதவிகிதம் கிடைத்த வேட்பாளருக்கு அந்த மாநிலத்திற்கான 54 அதிபர் தேர்தல் குழு உறுப்பினர்களும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் முறை இருக்கிறது. இதனால் வாக்களித்தவர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற அதிபருக்கான வேட்பாளர் தோற்றுவிடும் நிலை ஏற்படலாம்.

எடுத்துக்காட்டாக, 2000ம் ஆண்டு அதிபர் தேர்தல் அமெரிக்கா முழுவதிலும் ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5 கோடி 10 லட்சத்துக்கு மேல். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ் பெற்ற மொத்த வாக்குகள் 5 கோடி 5 லட்சத்துக்கும் குறைவானது. இருப்பினும், தேர்தல் குழு கணக்குப்படி புஷ் 271 பேர்களின் ஆதரவையும், அல்கோர் 266 பேர்களின் ஆதரவையும் பெற்றதால் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புளோரிடா மாநிலத்தில் அல்கோர் பெற்ற வாக்குகள் 29,12,253; புஷ் பெற்ற வாக்குகள் 29,12,790. இதன் விளைவாக, 543 வாக்குகள் அதிகம் பெற்ற புஷ் புளோரிடா மாநிலத்தின் 26 தேர்தல் குழுவினரின் ஒட்டுமொத்தமான எண்ணிக்கையை கூடுதலாகப் பெற்று அதிபர் ஆகிவிட்டார். இதைக் கவனிக்கும்பொழுது, அமெரிக்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கு அதிகமான வாக்குளை அல்கோர் பெற்றிருந்தாலும், புளோரிடா மாநிலத்தில் 543 வாக்குகள் குறைந்ததால், அவருக்கு அதிபர் பதவி கிடைக்கவில்லை.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட வினோதமான அதிபர் தேர்தல் குழு மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து பலராலும் கூறப்பட்டு வருகிறது. தற்பொழுது அமெரிக்காவில் பேராதரவு உள்ளவராகத் திகழும் பாரக் ஒபாமா சில மாநிலங்களில் ஏற்படும் தடுமாற்றங்களை மீறி, அவரே அதிகமான ஆதரவுடன், வாக்குகளுடன் அதிபராக வெளிப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

- நன்றி தினமணி -

No comments: