" வெள்ளை மாளிகையில் கறுப்பு நிலா "
"நமக்கு தேவை மாற்றம்" என்ற ஒற்றை கோஷத்தினால் அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார், பராக் ஒபாமா.
பராக் என்ற அரேபிய வார்த்தைக்கு `ஆசிர்வதிக்கப் பட்டவர்' என்று அர்த்தம். ஆப்பிரிக்க கறுப்பரான ஒபாமா, வெள்ளையர் நாடான அமெரிக்காவில் அதிபராகி அந்த அர்த்தத்துக்கு வலு சேர்த்து இருக்கிறார்.
அடிமை வியாபாரம்
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள்தான், கறுப்பர் இனத்தவர். ஆடு, மாடுகளை போல கூட்டம் கூட்டமாக விற்பனை செய்யப்பட்டு தலைமுறை, தலைமுறையாக கூனிக் குறுகி கிடந்த அந்த இனத்துக்கு சுவாசக் காற்றாய் அமைந்தவர் ஆபிரகாம்
லிங்கன்.
அவர் அதிபராக இருந்தபோதுதான் அடிமை வியாபாரத்துக்கு தடை விதித்தார். ஆனாலும் கூட இனவெறியின் கொடுவாள் மழுங்கவில்லை. அடிமை வியாபாரத்தை ஒழித்து பல ஆண்டுகள் கழித்து, கறுப்பர் இன உரிமைகளுக்காக மார்ட்டின் லூதர் கிங் போராடினார். ஆனால், இனவெறி என்னும் கொடுவாள் அவரை வீழ்த்தியது.
ஆபிரிக்க தந்தை
அவர் விதைத்த விதை, 50 ஆண்டுகள் கழித்து கற்பக விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. எந்த அமெரிக்காவில் சம உரிமைக்காக கறுப்பர்கள் போராடினார்களோ அதே அமெரிக்காவின் முதல் குடிமகனாக கறுப்பர் இனத்தை சேர்ந்த பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
ஒபாமாவின் தந்தை ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா நாட்டின் கறுப்பர் இனத்தை சேர்ந்தவர். ஹவாய் தீவுக்கு படிக்க வந்தபோது அமெரிக்காவை சேர்ந்த ஆன் துன்ஹம் என்ற வெள்ளை இன பெண்ணை காதலித்து மணமுடித்தார். அவர்களுடைய மணவாழ்க்கையின் அன்பு பரிசாக, 1961ம் ஆண்டு ஒபாமா பிறந்தார்.
இரண்டு ஆண்டுகளில் தாய்-தந்தை இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். தந்தை கென்யா சென்று விட்டார். அதே நேரத்தில், இந்தோனேசியாவை சேர்ந்த லோலோ செயடோரா என்ற முஸ்லிம் ஒருவரை ஒபாமாவின் தாய் மறுமணம் செய்தார். அமெரிக்காவில் இருந்து இந்தோனேசியாவுக்கு குடியேறிய ஆன்-லோலோ தம்பதி, சிறுவன் ஒபாமாவையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
காதல் திருமணம்
12 வயதுக்கு பின் அமெரிக்கா திரும்பிய ஒபாமா, தாய்வழிப் பாட்டியின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். 1983ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தார். நிïயார்க் மற்றும் சிகாகோவில் சில வேலைகளை செய்து வந்த அவர், 1988ம் ஆண்டு ஹார்வர்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.
அங்குதான் தன்னுடைய வாழ்க்கையின் வசந்தத்தை சந்தித்தார். ஒபாமாவின் விழியில் நுழைந்து இதயத்தில் இடம் பிடித்தார், மிச்செலி என்னும் மாணவி. இரண்டு இதயங்களும் ஒன்றிணைந்து திருமணத்தில் முடிந்தது. அவர்களுடைய காதல் மண வாழ்க்கையை அங்கீகரிக்கும் விதமாக மாலியா (10), ஷாஷா (7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
சட்டம் முடித்த பிறகு வக்கீலாகவும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியராகவும் ஒபாமா பணியாற்றினார். கல்லூரி நாட்களிலேயே பல்வேறு அமைப்புகளின் தலைவராகவும், மாணவ பத்திரிகை ஆசிரியராகவும் தலைமைப் பண்பை வளர்த்துக் கொண்டவர் என்பதால் அரசியல் ஆர்வம் இயற்கையாகவே ஒட்டிக் கொண்டது.
அதன் விளைவாக, ஜனநாயக கட்சி சார்பில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு 1996ம் ஆண்டும், 2004ம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதும் செனட் உறுப்பினராக இருக்கிறார்.
அதிபர் தேர்தலில் போட்டி
இளமை பருவம் முதல் எதிர்ப்புகளையே ஏணியாக கொண்டு முன்னேறிய ஒபாமாவுக்கு அதிபர் பதவியும் சாமானியமாக கிடைக்கவில்லை. ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களம் இறங்கவே மூச்சு முட்டிப் போனது. ஹிலாரி, அவருக்கு கடும் சவாலாக இருந்தார்.
பிரசாரத்தின்போது, குடியரசு கட்சியில் இருந்து சரமாரியான விமர்சனக் கணைகள் துளைத்து எடுத்தன. முஸ்லிம், கறுப்பு இனத்தவர் என என்னவெல்லாமோ விமர்சனங்கள். ஆனால், `நமக்கு தேவை, மாற்றம்` என்ற ஒபாமாவின் கவச(கோஷ)த்தால் அந்த கணைகள் அனைத்தும் முனை முறிந்து போயின.
இந்தியாவுக்கு ஆதரவு
எதிர்க்கட்சி வேட்பாளர் மெக்கைனுடன் நடந்த நேருக்கு நேர் விவாதத்தின்போது ஆணித்தரமான கருத்துகளை முன்வைத்து மக்களை கவர்ந்தார். வேட்பாளர் நிதி திரட்டுவதிலும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.3384 கோடி (564 மில்லியன் டாலர்) திரட்டினார். ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் கறுப்பர் இனத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் தலைவராக ஒபாமா உயர்ந்து விட்டார்.
அணுசக்தி ஒப்பந்தம் போன்ற முக்கியமான விஷயங்களில் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பாராளுமன்ற வாக்கெடுப்பின்போது இந்தியாவுக்கு ஆதரவாகவே ஒபாமா வாக்களித்தார். அது மட்டுமல்ல தீவிரவாதம், அணு ஆயுத பரவல், வறுமை, இனப்படுகொலை போன்றவற்றை எதிர் கொள்ள புதிய கூட்டாளி நாடுகளை உருவாக்கவும் ஒபாமா சூளுரைத்து இருக்கிறார்.
இந்திய-அமெரிக்க உறவு என்னும் மேல் வானத்தில் ஒரு கறுப்பு ஒளி மின்னுவது அனைவருடைய கண்களுக்கும் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment