பொருளாதார நெருக்கடியை ஒருங்கிணைந்து சமாளிப்போம் அதிபராக தேர்வான ஒபாமா பேச்சு
பொருளாதார நெருக்கடியை ஒருங்கிணைந்து சமாளிப்போம் என்று அமெரிக்க அதிபராக தேர்வான பராக் ஒபாமா கூறினார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பராக் ஒபாமா, சிகாகோ நகரின் கிராண்ட் பார்க்கில் லட்சக் கணக்கில் திரண்ட தனது ஆதரவாளர்களிடையே பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாற்றம் வந்திருக்கிறது
அமெரிக்காவில் மாற்றம் வந்திருக்கிறது. அதற்காக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாற்றம் நீண்ட போராட்டத்திற்குப் பின் வந்திருக்கிறது. தேர்தலில் நாம் மேற்கொண்ட கடும் உழைப்பு, முயற்சிகள் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது எதிர் அணி வேட்பாளர் மெக்கைனும் மிகவும் பாடுபட்டார். நாட்டின் மீது அவர் கொண்டிருந்த அளவு கடந்த அன்பினால் கடுமையாக உழைத்தார். வியட்நாம் போரில் அமெரிக்காவுக்காக அவர் செய்த தியாகத்தை நாம் மறந்து விடக்கூடாது. அவர் துணிச்சலுடனும், சுயநலமின்றியும் தனது சேவையை நாட்டுக்காக ஆற்றியிருக்கிறார். அவரது தியாகத்தை நாம் போற்றவேண்டும்.
என்னை இந்த அளவிற்கு வளர்த்து ஆளாக்கிய எனது பாட்டி உயிருடன் இல்லை என்பதை அறிவேன். எனினும், அவரும் எனது குடும்பத்தினருடன் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றே எண்ணுகிறேன். அவரை இன்று இழந்து நிற்கிறேன். அவருக்கு நான் பட்டிருக்கும் கடன்கள் அளவிட முடியாதவை.
உயரத்தை அடைவோம்
தற்போது, நமக்கு எதிராக உள்ள பாதை மிகவும் நீளமானது. நாம் ஏறவேண்டிய உயரமோ மிகவும் செங்குத்தானது. அந்த உயரத்தை நம்மால் ஒரு வருடத்திலோ அல்லது இன்னும் சில காலங்களிலேயோ அடைந்து விட முடியாது.
ஆனாலும், அமெரிக்காவும், நானும் அந்த இடத்தை அடைந்து விடுவோம் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாம் நிச்சயம் அந்த இடத்தை அடைவோம் என்று உங்களிடம் உறுதி கூறிக் கொள்கிறேன்.
ஒருங்கிணைந்து உழைப்போம்
நமக்கு முன்னதாக உள்ள பொருளாதார நெருக்கடிகளும், இழப்புகளும், நாம் அனைவரும் ஒரே மக்களாக எழுவோம் அல்லது வீழ்வோம் என்பதையே உணர்த்தியிருக்கிறது.
தற்போது, நமக்கு தேச பக்தி மீதான சேவையில் புதிய உத்வேகமும், பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. அதை நம் ஒருவருக்கானது என்று மட்டுமே கருதாமல் அனைவருக்கும் பொதுவானது என்று நினைத்து அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைப்போம்.
உலக மக்கள் கண்ணீரையும், ஏழ்மையையும் அமெரிக்கா தோற்கடிக்கும். அமைதியையும், பாதுகாப்பையும், விரும்புவோருக்கு என்றும் நாம் ஆதரவாக இருப்போம்.
மேற்கண்டவாறு பராக் ஒபாமா பேசினார்.
நெகிழ்ச்சி
ஒபாமா கூட்டத்தில் பேசியபோது அதை, ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 2 தடவை வாய்ப்பு கிடைக்காத கறுப்பரும், சிவில் உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜெஸ்சி ஜாக்சனும் ஆர்வமுடன் கேட்டார்.அப்போது, ஜெஸ்சியின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது நெகிழ்ச்சியான காட்சியாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment