
நிலவை ஆராய இந்தியா அனுப்பிய முதல் ஆளில்லா விண்கலமான சந்திரயான் 1 கலத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. கலனுக்குள் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க விண்வெளி விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நிலவை ஆராய கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்தியா சந்திரயான் 1 விண்கலனை ஏவியது. இந்தக் கலன் திட்டமிட்டபடி நிலவு வட்டப் பாதையை இம்மாத துவக்கத்தில் அடைந்தது. பிறகு நிலவின் தரைப் பகுதி மீது சில உபகரணங்கள் அடங்கிய துணைக் கலனையும் வெற்றிகரமாக செலுத்தியது. மேலும் நிலவின் மேல் பரப்பையும், பூமியையும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
ஆனால் திடிரென, சந்திரயான் கலனின் உள்ளே வெப்பநிலை வேகமாக உயர்ந்தது கண்டறியப்பட்டது. கலனுக்குள் வெப்பநிலை 50 டிகிரியைத் தொட்டதன் காரணமாக, செயற்கைக் கோளில் உள்ள கணினிகள் உள்ளிட்ட முக்கிய சாதனங்கள் தற்காலிகமாக செயல் நிறுத்தம் செய்யப்பட்டதாக திட்ட இயக்குனர் அண்ணாதுரை தமிழோசையிடம் தெரிவித்தார். இதன் காரணமாக கலனில் நிலவும் வெப்ப நிலை தற்போது 40 டிகிரி அளவுக்கு குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சந்திரனில் தற்போது கோடைக் காலம் என்பதால், சந்திரயான் விண்கலம், சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் கலனின் வெளிப்புறத்தில் கடும் வெப்பம் ஏற்படுவதாகவும் அண்ணாதுரை தெரிவித்தார்.
கலனுக்குள்ளே வெப்பத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சந்திரயான் விண்கலன் சந்திரனில் இருந்து 20 டிகிரி அளவுக்கு விலகி சாய்ந்து செல்லுமாறு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வெப்ப நிலை குறையாத பட்சத்தில், சந்திரயான் கலத்தின் வட்டப் பாதையை உயர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment