சூரியத் தொகுதி எல்லை ஆய்வுக்கான முதலாவது விண்கலம் வெற்றிகரமாக பயணம்


நாசாவின் "ஐ.பி.ஈ.எக்ஸ்' விண்கலமானது பசுபிக் சமுத்திரத்திலுள்ள கவாஜலெயின் அதேரஓல் எனும் இடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.47 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேற்படி விண்கலமானது சூரியத் தொகுதியின் எல்லைக்கு அப்பால் என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பான தரவுகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்பவுள்ளது. இத்தகைய ஆய்வு முயற்சிக்காக விண்கலமொன்று ஏவப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

"ஐ.பி.ஈ.எக்ஸ்' என்பது, நட்சத்திரங்களுக்கிடையிலான எல்லை ஆய்வு சாதனம் என்பதன் சுருக்கப் பெயராகும். நட்சத்திரங்களுக்கிடையிலான எல்லையில் நிலவும் குளிர்மையான வாயுக்கள் தொடர்பில் இந்த சாதனம் ஆய்வு செய்யவுள்ளது. மேற்படி விண்கலமானது பிற்பகல் 1.53 மணியளவில் அதனை ஏவப்பயன்பட்ட பெகாஸஸ் ஏவுகணையிலிருந்து தனிப்படுத்தப்பட்டு, தனது சுய உபகரணமுறைக் கட்டுப்பாட்டில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

45 நாள் பரிசோதனைக் காலக் கட்டத்தின் பிற்பாடு, தனது இரு வருட கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை மேற்படி விண்கலம் ஆரம்பிக்கும் என கிறீன்பெல்ட்டிலுள்ள நாசாவின் கோட்டார்ட் ஸ்பேஸ் பிளைட் நிலையத்தின் முகாமையாளர் கிரெக் பிரெஸியர் தெரிவித்தார். மேற்படி விண்கலமானது சக்தியேற்றம் பெற்ற உயர்வேக அணுத்துணிக்கைகளின் விளைவுகளை அடிப்படையாக வைத்து, சூரியத்தொகுதிக்கு அப்பாலுள்ள நிலைமை தொடர்பான பிரதிமை ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்த பிரதிமையானது நுண்ணிய எண்ணற்ற வண்ணப்புள்ளிகளால் உருவாக்கப்படவுள்ளது.

சூரியனிலிருந்து அனைத்து திசைகளிலும் மணிக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் வீசிய சூரியப் புயலொன்றையடுத்தே, இந்த சூரியத் தொகுதி எல்லைப் பகுதி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சூரியத் தொகுதி எல்லைப் பகுதியிலிருந்து அபாயமிக்க பிரபஞ்சக் கதிர்கள் பூமியை சுற்றியுள்ள விண்வெளியைத் தாக்கக் கூடிய வாய்ப்புள்ளதால் இது தொடர்பான ஆய்வு அவசியம் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

""இந்த ஆய்வின் முடிவில் ஆச்சரியமொன்று காத்திருக்கிறது என்பதை எம்மால் அறிய முடிகிறது'' என "ஐ.பி.ஈ,எக்ஸ்' விண்கலத்தின் பிரதான ஆய்வாளர் டேவிட் மக்கொமஸ் தெரிவித்தார்.

No comments: