விண்வெளிக்கு மின்தூக்கியில் பயணிக்கும் திட்டம் 2030 களுக்குள் பூர்த்தி செய்யப்படும்


பூமியிலுள்ளவர்கள் விண்வெளிக்கு சுலபமாக செல்வதற்கு உதவும் வகையில் மின் தூக்கியை வடிவமைப்பதில் 100 க்கு மேற்பட்ட பொறியியலாளர்களைக் கொண்ட ஜப்பானிய குழுவொன்று மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதியுயர் விஞ்ஞான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்படி மின்தூக்கியை அமைப்பது தொடர்பான திட்டமானது எதிர்வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

பூமி மேற்பரப்பில் அடித்தளத்தைக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மின்தூக்கி, விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரம் வரை ஊடுருவிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி மின் தூக்கியுடன் இணைத்து அமைக்கப்படும் பாரந்தாங்கியானது அதனது சமநிலையைப் பேணும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மின்தூக்கி மூலம் விண்வெளியிலுள்ள செய்மதிகளை இலகுவாக சென்றடைய முடியும் என தெரிவிக்கும் பொறியியல் நிபுணர்கள், மின் தூக்கியின் செயற்பாட்டுக்கு தேவையான சக்தியை, அணுசக்தி கழிவுகளிலிருந்து பெறுவது தொடர்பில் யோசனையை முன்வைத்துள்ளனர்.

மேலும் இந்த மின் தூக்கிகளில் சூரிய சக்திப் பிறப்பாக்கிகளை ஸ்தாபித்து அதன் மூலம் சக்தியை பிறப்பிக்கும் பிறிதொரு திட்டமும் பொறியியலாளர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரபல விஞ்ஞான எழுத்தாளர் ஆதர் சி கிளார்க்கால் 1979 ஆம் ஆண்டு எழுதப்பட்ட "த பவுண்டெய்ன்ஸ் ஒப் பரடைஸ்' என்ற நாவலில் இந்த விண்வெளிக்கான மின்தூக்கி தொடர்பான திட்டமொன்று விபரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் அமெரிக்காவில் லிப்ட்போர்ட் குழுமத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் விண்வெளிக்கான மின் தூக்கியை வடிவமைக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். விண்வெளிக்கான மின்தூக்கியை வெற்றிகரமாக வடிவமைப்பதற்கு ஊக்குவிக்கும் முகமாக, அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் "4 மில்லியன் டொலர் விண்வெளி மின்தூக்கி சவால்' போட்டியை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் மேற்படி விண்வெளிக்கான மின் தூக்கியை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ள "ஜப்பான் ஸ்பேஸ் எலவேட்டர்' சங்கத்தின் பேச்சாளரான அகிரா துஸுசிடா விபரிக்கையில், தமது நிறுவனமான அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் "ஸ்பேஸ்வார்ட் பவுண்டேஷன்' மற்றும் லக்ஸம்பேர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐரோப்பிய நிறுவனம் என்பவற்றுடன் இணைந்து இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விண்வெளி மின் தூக்கியை மேலெடுத்துச் செல்வதற்கு காபன் நுண்குழாய்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், விண்வெளிக்கான மின்தூக்கி இலட்சியமானது 2020 களிலோ அல்லது 2030 களிலோ உரிய இலக்கை எட்டி விடும் என்று கூறினார். மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள கலரஓபாகொஸ் தீவுகளே இந்த மின் தூக்கிகளுக்கான தளமாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

No comments: