செவ்வாய் கிரகத்தில் பனிப்பொழிவு

செவ்வாய்க் கிரகத்தில் பனிப்பொழிவு இடம்பெற்றமைக்கான சான்றுகளை அக்கிரகத்தில் நிலை கொண்டுள்ள பீனிக்ஸ் விண்கலம் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. மேற்படி விண்கலத்திலுள்ள தன்னியக்க இயந்திரமானது செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலத்தினூடாக நீர் மூலக்கூறுகளை கொண்ட பாரிய பனிப்பளிங்குருக்கள் விழுவதை எடுத்துக்காட்டும் தரவுகளை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தன்னியக்க உபகரணத்தின் லேசர் கதிரலைகள் மூலமே செவ்வாய்க் கிரக வளிமண்டலத்தின் கூறுகளை ஆராய்ந்து மேற்படி தரவுகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பனிப் பளிங்குருக்களானது செவ்வாயின் மேற்பரப்பை அணுகுவதற்கு முன்பு, நீராவி நிலையை அடைவது கண்டறியப்பட்டுள்ளது.

"இந்த பனி செவ்வாயின் மேற்பரப்பை உண்மையில் எவ்வாறு அடைகிறது என்பதை எதிர்வரும் மாதம்மேலும் உன்னிப்பாக அவதானிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என பீனிக்ஸ் விண்கலத்தின் முன்னணி விஞ்ஞானியான ரொரன்டோ யோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜிம் வைட்வே கூறினார்.

"இது செவ்வாய்க் கிரகத்தில் மேற்பரப்பில் நீர் ஆவியாகி ஒடுங்கும் ஐதரசன் வட்டசெயற்பாடு இடம்பெறுவது தொடர்பில் முக்கிய சான்றாக இது உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மே 25 ஆம் திகதி செவ்வாய்க்கிரகத்தின் வட பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய பீனிக்ஸ் விண்கலமானது, செவ்வாய்க்கிரகத்தில் பூகர்ப்பவியல் மற்றும் சுற்றுச் சூழலை ஆராயும் முகமாக பலதரப்பட்ட உபகரணங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ் விண்கலத்திலுள்ள காலநிலை அவதான நிலையம், செவ்வாய்க்கிரகத்தின் வெப்பநிலை, அமுக்கம் வளிமண்டலத்தில் இடம்பெறும் மாற்றங்கள் என்பனவற்றை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது.

No comments: