சந்திரனில் விழுந்து சிதறிய சீன "சேஞ்ச் 1' விண்கலம்

சீனாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலமொன்று சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து சிதறியுள்ளது. "சேஞ்ச்1' என்ற மேற்படி விண்கலமானது சந்திரன் வரைபடத்தை உருவாக்கும் தனது 16 மாதகால செயற்பாடுகளின் முடிவில் செயலிழந்து சந்திரனின் மேற்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விண்கலமானது 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏவப்பட்டது. சீனாவானது சந்திரனில் மனிதனை தரையிறக்குவது, விண்வெளி நிலையத்தை ஸ்தாபிப்பது உள்ளடங்கலாக பல்வேறு விண்வெளி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

"சேஞ்ச்1' விண்கலமானது கிழக்கு சீனாவிலுள்ள கிங்டா மற்றும் வட மேற்கு சீனாவிலுள்ள கஷ்கார் ஆகிய இடங்களிலுள்ள இரு விண்வெளி நிலையங்களிலிருந்து தூர இயங்கும் முறையின் மூலம் செயற்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனா, எதிர்வரும் வருடம் அந்நாட்டின் முதலாவது விண்வெளி நிலையத்துக்கான இணைப்பை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சுமார் 8.5 தொன் நிறையுடைய "தியாங்கொங் 1' என்ற இந்த விண்கல இணைப்பானது சீன விஞ்ஞானிகள் பூச்சிய ஈர்ப்புத் தன்மையில் விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தளமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இரத்தக்கறை படிந்த கடிதத்தை ஒபாமாவுக்கு அனுப்பிய எய்ட்ஸ் நோயாளி

அமெரிக்காவிலுள்ள எய்ட்ஸ் நோயாளி ஒருவர் தனது இரத்தத்தை ஒரு தாளில் படியவைத்து அதனை கடிதத்துடன் இணைத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் அந்தக் கடிதத்தில் கிறிஸ்மஸ் வாழ்த்துமடல்,ஒரேஞ் நிறதூள், தனது புகைப்படம் ஆகியவற்றையும் சேர்த்து அனுப்பிவைத்திருந்தார். அந்த நபரை அடையாளம் கண்டு பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எத்தியோப்பிய நாட்டைச்சேர்ந்த அகதி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையின் போது, தான் எயிட்ஸ் நோயால் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு உதவிட அரசின் கவனத்தை ஈர்க்கவே இதுபோன்றசெயலில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். ஒபாமாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இரத்தக்கறை படியவைக்க தனது ஒரு விரலையே பிளேற்றால் துண்டித்ததாகவும் அந்த நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் ஒபாமாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒபாமாவுக்கு ஏற்கனவே கொலைமிரட்டல் இருந்து வருகிறது. இதனால் அவருக்கு எந்த வழியிலும் அச்சுறுத்தல் வரலாம் எனக் கருதி அவருக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலையில், ஒபாமாவுக்கு வந்த கடிதத்துக்குள் இருந்த ஒரேஞ் நிறத்தூளினால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இரசாயன விஞ்ஞானிகளை வரவழைத்து அந்த தூளை சோதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.