பரமாத்மாவின் கீதையின் சில துளிகள் !
நானே இந்த அகிலம்
அகிலத்தின் அனைத்து அணுவும் நானாவேன். சூரியனும் நானாவேன் குளிர் சந்திரனும் நானாவேன். நட்சத்திரங்களும் அனைத்து கிரகங்களும் நானே. ஒளிபொருந்திய சூரியனைவிட புராதனன். விருட்சத்தில் துளிர்க்கின்ற  தளிரைவிட புதுமையானவன். அனைத்து மானிடரும் நானாவேன். மேலும் சொர்க்கம் மற்றும் நரகத்தை ஆட்டுவிக்கும் சக்தியாவேன். கொடிய என்ணம் கொண்ட துரியனும் நான். வில்லேந்திய விஜயனும் நானே.
நான் அநேக ஜனனம் எடுத்தவன் பார்த்தா. பற்பல அவதாரங்களை நான் எனதாக்கியவன். எண்ணற்ற சரீரங்களை ஆடையாக்கி இந்த மண்ணில் புதைத்தவன் நான். இனியும் நான் மேலும் மேலும் ஜனனம் எடுப்பேன்.
தர்மம் அகிலத்தில் வீழும் போதெலாம், தர்மம் தன் பலத்தை இழக்கும் போதெல்லாம் சர்புருஷர்களை அகிலத்தில் தோற்றுவிப்பதற்காக அதர்மிகளை வேரறுப்பதற்காக தர்மத்தை ஸ்தாபிதம் செய்வதற்காக நான் புவியில் ஜனனம் எடுப்பேன். இந்நிகழ்வு ஒவ்வொரு யுகத்திலும் நடந்துள்ளது. இனிவரும் காலத்திலும் இந்த நிகழ்வு தொடரும். நானே அனைத்துமான பரமாத்மா.
மச்சாவதாரமும் நானே
வாமன அவதாரமும் நானே
பரசுராமரும் நானாவேன்
தசரத நந்தன் ராமரும் நானாவேன்
நானே பிரம்மா விஷ்ணு சர்வேஸ்வரன், அத்துடன் சரஸ்வதி காளி, மகாலக்ஷ்மியுமாவேன். நான் ஆண்மகனும் அல்ல, நான் ஸ்திரியும் அல்ல. இரண்டும் அல்லாதவனும் அல்ல. சரீரம் உற்றவன் நான், சரீரம் அற்றவன் நான். ஞானம் நான், சிருஷ்டியும் நான், ஆன்ம ஒளியும் நான். பரப்பிரம்மமும் நான். காணும் அனைத்தும் நான். எதுவுமற்ற சூட்ஷமமும் நான். பிறப்பற்றவன் நான். இறப்பற்றவன் நான். ஜகத்தில் வாழும் ஜீவன்கள் அனைத்தும் தலைவணங்கும் சிறப்புற்றவன் நான்.

No comments: