அதிவேக ரயில், ஜப்பானில் புதிய சாதனை


      ஜப்பானிய ரயில் ஒன்று அதிவேகமாக ஓடுவதில் முன்னர் இருந்த சாதனையை முறியடித்து புதிய உலகச் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ரயில் வண்டி மிக அதிக காந்த சக்தி மூலம் இயங்குகிறது. ஓடும் ரயில் தண்டவாளங்களைத் தொடாமல் அதியுயர் காந்த சக்தி மூலமே செயல்படும் இந்த வண்டி, ஈர்ப்பு விசை மற்றும் இதர சக்திகளை சமன்படுத்தி பயணிக்கும். இந்த அதிவேக ரயில் வண்டி அந்த 283 கிலோமீட்டர் தூரத்தை நாற்பது நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பயணிக்கும். தலைநகர் டோக்யோ மற்றும் நகோயா நகருக்கு இடையே 2027 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம் எண்ணியுள்ளது. 
      ஆனாலும் இந்தச் சாதனை வேகத்தை ரயில் பயணிகள் தமது பயணத்தில் அனுபவிக்க இயலாது என அந்த ரயில் வண்டி சேவையை நடத்தும் ஜப்பான் மத்திய ரயில்வே கூறியுள்ளது. ஏனெனில் மிக அதிகபட்சமாக மணிக்கு 505 கிலோ மீட்டர் வேகத்திலேயே தங்கள் அதை இயக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். டோக்யோவிலிருந்து நகோயா இடையேயான பயண தூரத்துக்கான கட்டுமான பணிகளுக்கு மட்டும் 100 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் 80 சதவீதம் பாதைகள் மிகவும் செலவு பிடிக்கும் சுரங்கப் பாதைகளாக அமையும் என்று ஏ ஃஎப் பி செய்தி நிறுவனம் கூறுகிறது. எதிர்வரும் 2045 ஆம் ஆண்டு இந்த வகையிலான அதிவேக மின்காந்தப் புலன் மூலம் ஓடும் ரயில்கள் டோக்யோவிலிருந்து ஒசாகா வரை ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பயண நேரம் இப்போதுள்ள நேரத்தில் பாதியளவே இருக்கும்.
      உயர்சக்தி காந்தங்கள் மூலம் இயக்கப்படும் இந்த ரயில்கள் எந்த அளவுக்கு வேகமாக ஓடுகிறதோ, அந்த அளவுக்கு அது உறுதியாக இருக்கும் என்று அந்த ரயில்வேயின் தலைமை ஆய்வாளர் யசுகாசூ எண்டோ கூறுகிறார். இதன் மூலம் பயணத்தின் தரம் மேம்படும் எனவும் அவர் கூறுகிறார். ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ள வேளையில், இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நியூயார்க் மற்றும் வாஷிங்டன் இடையேயான ரயில் பாதையை அமைக்க வழி செய்யும் ஜப்பானின் திட்டத்தை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நன்றி - பி.பி.சி. இணையம் - 

No comments: