விண்வெளியில் இணையம்


மனிதன் ஒரு சமுக விலங்கு என்று கூறுவார்கள். அவனை சுற்றியுள்ள சமூகமின்றி தனித்தீவாக அவனால் காலம் கடத்த இயலாது. நாம், உறவுகளின் பின்னல்களால் உருவாக்கப்பட்டுள்ளதே இதற்கு எடுத்துக்காட்டு. உறவுகளை வளர்த்து கொள்ளவும், தொடர்புகளை தொடரவும் பல்வேறு வழிமுறைகளை நாம் கையாளுகின்றோம். குறிப்பாக, தொலைபேசி கண்டுபிடிப்பு தொலைதூரத் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம். உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஊடகங்கள் நமக்கு தெரியப்படுத்தி, எங்கெங்கோ இருக்கும் மக்களோடு ஒருவித தொடர்பை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட முறையில் நாம் வளர்க்கின்ற நெருக்கமான தொடர்புகளை தான் என்றும் விரும்புகின்றோம்.

தொலைபேசிக்கு வடம் மூலம் இணைப்பு இருக்கவேண்டும் என்ற நிலைமாறி, வட இணைப்புகளின்றி பேசிக் கொள்ளும் வகையில் செல்லிடபேசி உலாவர தொடங்கியது. அடுத்ததாக, நொடிப்பொழுதில் அனைவரையும் நமது வீட்டு முற்றத்தில் பார்த்து சந்திப்பது போன்ற உணர்வை இணைய வசதி தருகிறது. இவ்வாறு புவியிலான தொலைத்தொடர்பு வசதிகளின் வளர்முகத்தோடு, விண்வெளியை நோக்கி அறிவியலாளர்களின் ஆய்வு திரும்பியுள்ளது.

விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்படுகின்ற விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் புவியிலுள்ள அவற்றின் கட்டுப்பாட்டு மையங்களால் தான் இயக்கப்படுகின்றன. இந்த மையங்கள் அனுப்புகின்ற சமிக்ஞைகளை பெற்று கொள்ளும் அதற்கான விண்கலன் அல்லது செயற்கைக்கோள்கள் பதில்கள் அனுப்புகின்றன. பூமியில் அதற்கு தேவையான எல்லா அதிநவீன வசதிகளும் கட்டியமைக்கப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு தொலைத்தொடர்பு வசதிகளை விண் கோள்களுக்கு இடையே உருவாக்கும் முயற்சிகளை அறிவியலாளர்கள் மேற்கொண்டனர்.

புவியில் என்றால் தகவல் அனுப்புகின்ற அல்லது பெறுகின்ற கருவிகளை, அதனை தாங்கி நிற்கின்ற கம்பங்களை திட்டமிட்டு எளிதாக அமைத்து விடலாம். ஆனால் விண்வெளியில் அவற்றை எங்கு கொண்டு வைப்பது? இத்தகைய கோள்களுக்கு இடையிலான தொலைதொடர்புகளை இணையவசதி மூலம் மேற்கொள்வதற்கான மென்பொருள் கண்டுபிடிக்கப்ட்டு அதற்கான முதல் ஆய்வை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நடத்தியுள்ளது.

No comments: