2 ஆவது ஐ.பி.எல். போட்டிகள் தென்னாபிரிக்காவில் நாளை ஆரம்பம்

2 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் நாளை சனிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் போட்டி நாளை சனிக்கிழமை முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரை 37 நாட்கள் நடக்கிறது. இதில் சென்னை சுப்ப கிங்ஸ், ராஜஸ்தான், ரோயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

18 ஆம் திகதி நடைபெறும் தொடக்க போட்டியில் சென்னை சுப்ப கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 22 ஆம் திகதி முதல் அரை இறுதியும், 23 ஆம் திகதி 2 ஆவது அரை இறுதியும், இறுதிப்போட்டி மே 24 ஆம் திகதியும் நடைபெறும்.

கேப்டவுண், போர்ட் எலிசபெத், டேர்பன், பிரிடோரியா, சிம்பொலி, ஜொகனஸ் பேர்க், செஞ்சூரியன், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.

கடந்த ஆண்டு ஷேன் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கிண்ணத்தை வென்றது. தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் 2 ஆவது இடத்தை பிடித்தது. ஷேவாக்கின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், யுவராஜ் சிங்கின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் அரை இறுதியில் தோற்றன.

கடந்த முறை ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு கொடுக்க இயலாததால் இந்தப் போட்டி தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் ஐ.பி.எல். போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற வாய்ப்பிருக்கிறது.

இலங்கை, இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கும் இரவு 8 மணிக்கும் போட்டிகள் தொடங்குகிறது.

இதேவேளை, இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 70 சதவீத டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 125 ரூபா மற்றும் 375 ரூபாவுக்கான டிக்கெட்டுகள் இன்னும் சில தினங்களில் விற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ், சென்னை சுப்ப கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தொடக்க நாளில் மோதும். இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுவிட்டன.

37 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் டிக்கெட் விற்பனை மூலம் 40 கோடி ரூபா முதல் 45 கோடி ரூபா வரை வருமானம் கிடைக்குமென்று தெரிகிறது.

No comments: