செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்குரிய நீர்வளம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் நாஸாவின் குழுவொன்று இங்கு அமிலங்களை உப்பாக மாற்றும் கார்பனேட் செறிந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக சான் பிரான்ஸிக்கோவில் நடைபெற்ற அமெரிக்க பூகோள, காலநிலை ஒன்றியத்தின் கூட்டத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது மிகவும் அதிசயமானதெனத் தெரிவித்துள்ள ரோட் ஐலண்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜோன் நீரும் கார்பன் ட்யொக்சைட்டும் கல்சியம், இரும்பு அல்லது மக்னீசியத்துடன் கலக்கும் போது கார்பனேட் உருவாவதாகவும் இது அமிலத்தை மிக விரைவில் கரையச் செய்யுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் செவ்வாய்க் கிரகத்தில் இருந்த நீர் அனைத்தும் ஒரு காலத்தில் அமிலமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
பிறிதொரு விஞ்ஞானி தெரிவிக்கையில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலொன்று செவ்வாயில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டதொரு வகை உயிரினம் இங்கு வாழ்ந்தமைக்கான பதிவுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 3.6 பில்லியன் வருடங்கள் பழைமை வாய்ந்த கார்பனேட் பாறையொன்று இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செவ்வாயை ஆராயும் விண்கலத்தினால் எடுக்கப்பட்ட படங்களில் ஒரு கால்பந்தாட்ட மைதான அளவுக்கு கார்பனேட் படிவுகள் இருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment