கூகுள் எர்த்துக்குப் போட்டியாக இஸ்ரோவின் 'புவன்'!

கூகுள் எர்த் போன்ற இணையதளம் ஒன்றை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதற்கு புவன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 90வது பிறந்த நாளையொட்டி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திய வானியல் கழகத்தில் நடந்த புவன் தொடக்க விழாவில் நாட்டின் முன்னணி விண்வெளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சி இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

ஏஜென்சியின் இயக்குநர் வி.ஜெயராமன் கூறுகையில், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தத் திட்டத்திற்காக, இஸ்ரோவிலிருந்து இளம் விஞ்ஞானிகள் சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் பணியின் தொடக்கம் முதல் முடிவு வரை அயராமல் பாடுபட்ட அந்தக் குழு தற்போது வெற்றிகரமாக புவனை உருவாக்கியுள்ளது.

இந்திய செயற்கைக்கோளான ரிசோர்ஸ்சாட்-1 போன்றவற்றிலிருந்து கிடைத்த டேட்டாக்களைப் பயன்படுத்தி புவன் உருவாக்கப்பட்டுள்ளது. புவன் என்றால் சமஸ்கிருத மொழியில் பூமி என்று பொருள்.

இந்த இணையதளத்தில், பூமியில் எங்கு ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பது உள்பட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் உள்ளது. அதேசமயம், பொது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை பகிரங்கமாக வெளியிடாமல் காப்போம் என்றார்.

இஸ்ரோ தலைமை செய்தித் தொடர்பாளர் சதீஷ் கூறுகையில், கூகுள் எர்த்துடன் ஒப்பிடுகையில், புவன் சிறப்பானது. இந்திய நகரங்கள் [^] குறித்த அனைத்துத் தகவல்களையும் இது தரும். பயன்பாட்டாளர்களுக்கு இந்த தளம் மிகவும் சவுகரியமானதாக இருக்கும் என்றார்.

கூகுள் எர்த் தளத்தில், 200 மீட்டர் வரைக்கும்தான் 'ஜூம்' செய்ய முடியும். அதேசமயம், புவனில் 10 மீட்டர் வரை செல்ல முடியும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புவன் சாப்ட்வேரை bhuvan.nrsc.gov.in இணையத் தளத்தில் டெளன்லோட் செய்யலாம்.

ஆனால், இஸ்ரோவின் இந்தத் தளத்திலிருந்து புவனை டெளன்லோட் செய்வதற்கு உங்களுக்கு ரொம்பப் பொறுமை வேண்டும். அதிவேக பிராண்ட் பேண்ட் லைனிலேயே இதை டெளன்லோட் செய்ய அரை மணி நேரத்துக்கும் மேலாகிறது. இடையில் சர்வர் 'உட்கார்ந்துவிட்டால்' இன்னும் அரை மணி நேரமும் ஆகும்.

இன்று பகல் முழுவதும் இந்த இணையத் தளம் ஓபன் ஆகவே இல்லை. அதைவிடக் கொடுமை இந்த புவன் குறித்து இஸ்ரோ இணையத் தளத்தில் எந்தத் தகவலும் இல்லை என்பது தான்.

No comments: