'ஆஸ்கார்' விருதை அடுத்து புதிய முயற்சி "திருக்குறளுக்கு இசையமைப்பேன்'' ஏ.ஆர்.ரகுமான் பேட்டி


'ஆஸ்கார்' விருதை அடுத்து புதிய முயற்சி "திருக்குறளுக்கு இசையமைப்பேன்" என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

பேட்டி

உலக திரையுலகின் மிக உயர்ந்த விருது, 'ஆஸ்கார்.' `ஸ்லம் டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்ததன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கார் விருதுகளை வென்று, இந்தியாவையும், தமிழ்நாட்டையும் தலைநிமிர வைத்து இருக்கிறார்.

ஆஸ்கார் விருதுகளுடன் அமெரிக்காவில் இருந்து அவர் நேற்று சென்னை திரும்பினார். நேற்று மாலை ஏ.ஆர்.ரகுமான், சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரை பேட்டி காண்பதற்கு 300-க்கும் மேற்பட்ட புகைப்பட நிபுணர்களும், நிருபர்களும் அங்கு குவிந்தனர்.

தாமதம்

3 மணிக்கு பேட்டி தொடங்க இருந்தது. ரகுமான் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்குத்தான் அங்கு வந்து சேர்ந்தார். புகைப்பட நிபுணர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரை படம் எடுத்தார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 1/2 மணி நேரம் போட்டோவுக்கு `போஸ்' கொடுத்தபின், ரகுமான் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரது பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- ஆஸ்கார் விருதை வென்றதற்காக உங்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு `எம்.பி.' பதவி வழங்கினால், ஏற்றுக்கொள்வீர்களா?

பதில் (சிரித்தபடி):- அந்த மாதிரி பதவிகளை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. பதவிக்காக நான் கவலைப்படுவதில்லை.

சுதந்திரம்

கேள்வி:- தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி படங்களில் இசையமைக்கும்போது, எந்த மொழி படத்தில் உங்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது?

பதில்:- என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழ் படங்களில் இசையமைக்கும்போதுதான் அதிக சுதந்திரம் இருந்ததாக உணர்ந்தேன்.

கேள்வி:- `ஸ்லம் டாக் மில்லினர்' படம் `ஆஸ்கார்' விருது பெறும் என்று எதிர்பார்த்தீர்களா?

பதில்:- அந்த படத்தை முதலில் வாங்குவதற்கு ஆள் இல்லை. நல்ல கதையம்சம் இருந்ததாக நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். அதனால் அந்த படத்துக்கு முழுமையான ஈடுபாடுடன் இசையமைத்தேன்.டேனி பாயல்

கேள்வி:- அந்த படத்தின் டைரக்டர் டேனி பாயல் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- மிக சிறந்த டைரக்டர்.

கேள்வி:- அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிவீர்களா?

பதில்:- இன்னும் முடிவு செய்யவில்லை.

கேள்வி:- இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் ஆகிய 2 பட்டங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

பதில்:- இரண்டுமே பிடிக்கவில்லை.

திருக்குறள்

கேள்வி:- வைரமுத்து எழுதும் புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு, எப்போது இசையமைப்பீர்கள்?

பதில்:- அவர் எழுதி முடித்ததும், இசையமைப்பேன்.

கேள்வி:- உங்கள் இசையில், `சிம்பொனி' எப்போது வரும்?

பதில்:- அதற்கு இன்னும் `டைம்' ஆகும்.

கேள்வி:- ஆஸ்கார் விருதை அடுத்து, உங்கள் சாதனையாக அடுத்த முயற்சி எது?

பதில்:- திருக்குறளுக்கும், குனங்குடி மஸ்தான் கவிதைகளுக்கும் இசையமைக்கப்போகிறேன்.

தமிழ் படங்கள்

கேள்வி:- தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைப்பீர்களா?

பதில்:- நல்ல தமிழ் படங்களுக்கு மட்டும் இசையமைப்பேன்.

கேள்வி:- இந்தியாவின் கதாநாயகனாகி விட்ட நீங்கள், ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பீர்களா?

பதில் (சிரித்தபடி):- எனக்கு நடிக்க தெரியாது. இசையமைக்கத்தான் தெரியும். அதனால் நடிக்க விரும்பவில்லை.

கேள்வி:- `ஆஸ்கார் கேட்'டை நீங்கள் திறந்து விட்டு இருக்கிறீர்கள். தொடர்ந்து தமிழ் பட கலைஞர்கள் ஆஸ்கார் விருது பெறுவார்கள் என்று நம்புகிறீர்களா?

பதில்:- நிறைய பேர் வாங்கப்போகிறார்கள்.

இளையராஜா

கேள்வி:- இளையராஜா, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தாரா?

பதில்:- அவரும், அவருடைய மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து எனக்கு `இமெயில்' மூலம் வாழ்த்து அனுப்பினார்கள்.

கேள்வி:- `ஸ்லம் டாக் மில்லினர்' படத்தில் இடம்பெற்ற ``ஜெய் ஹோ'' பாடலுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருந்தது?

பதில்:- ஸ்பீல்பெர்க் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

தமிழில் பேச்சு

கேள்வி:- இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஆஸ்கார் விருது வாங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

பதில்:- இதற்கு முன்பு இத்தாலி, ஜப்பான், ஜெர்மன், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கிறார்கள். இது, இந்தியாவின் `டைம்.' `ரோஜா' படத்துக்காக தேசிய விருது பெறும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ, அவ்வளவு சந்தோஷப்பட்டேன், ஆஸ்கார் விருது பெறும்போது...

கேள்வி:- ஆஸ்கார் மேடையில் தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

பதில்:- என் தாய் மொழியை அந்த இடத்தில் பேசவேண்டும் என்று விரும்பினேன். பேசினேன்.

மணிரத்னம்

கேள்வி:- உங்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த மணிரத்னம் வாழ்த்து தெரிவித்தாரா?

பதில்:- ஆஸ்கார் விருது பெற்றதும், நான் அவருடன் போன் மூலம் தொடர்புகொண்டேன். போன் கிடைக்கவில்லை. ஆனால், நான் அமெரிக்காவுக்கு புறப்படும்போதே அவர் என்னை வாழ்த்தி தான் அனுப்பி வைத்தார்.

கேள்வி:- `ஸ்லம் டாக் மில்லினர்' படத்தில் இடம்பெற்ற மும்பை தாராவி பகுதி மக்களுக்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

பதில்:- தாராவியில் உள்ள குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த குழந்தைகள் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது, அதைப் பார்த்து அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.

இலங்கை தமிழர்கள்

கேள்வி:- இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இலங்கை தமிழர்களுக்காக நான், ``வெள்ளை பூக்கள்'' என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு யாரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்.

கேள்வி:- ஆஸ்கார் விருது பெற்ற ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு எப்படி இருந்தது?

பதில்:- அன்று நான் தூங்கவே இல்லை. முதலில் 4 மணி நேரம் ஒத்திகை பார்த்தேன். மறுபடியும் ஒருமுறை ஒத்திகை பார்க்க வேண்டி இருந்தது. அன்று எனக்கு ஓய்வு இல்லை.

திருப்தி

கேள்வி:- 2 ஆஸ்கார் விருதுகள், உங்களுக்கு திருப்திதானா?

பதில்:- இன்னும் நிறைய பேருக்கு கிடைக்க வேண்டும்.

கேள்வி:- ஆஸ்கார் விருது மூலம் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

பதில்:- 500 டாலர், வரியில்லாமல் கிடைத்தது.

கேள்வி:- உங்களுக்கு பரிசு பொருட்கள் நிறைய கிடைத்ததா?

பதில்:- எனக்கு கிடைத்த `சாம்பைன்' பாட்டில்களை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டேன்.

அறக்கட்டளை

கேள்வி:- உங்கள் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்?

பதில்:- உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையை போக்க ஆசைப்படுகிறேன். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும்.

கேள்வி:- `ஸ்லம் டாக்' (தெரு நாய்) என்பது, இந்தியாவை அவமதிப்பது போல் இல்லையா?

பதில்:- நாய்களை நம் நாட்டில்தான் அவமரியாதையாக கருதுகிறோம். வெளிநாட்டில், செல்லப்பிராணிகளாக நினைக்கிறார்கள்.

குழந்தைகள்

கேள்வி:- நீங்கள் ஏற்கனவே இசையமைத்த படங்களில், ஆஸ்கார் விருதுக்கு தகுதியான படம் என்று எந்த படத்தை கருதினீர்கள்?

பதில்:- `லகான்.'

கேள்வி:- ஆஸ்கார் விருது பெற்றது பற்றி உங்கள் குழந்தைகள் என்ன சொன்னார்கள்?

பதில்:- என் மூன்று குழந்தைகளும் எனக்கு `இ-மெயில்' அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் பதில் அளித்தார்.

No comments: