நாசாவின் சந்திரனுக்கான உளவுச் செய்மதி விண்ணேகியது

சந்திரனுக்கு 1960 களிலேயே மனிதனை அனுப்பிவிட்டதாகச் சொல்லும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தற்போது சந்திரன் பற்றிய தகவல்களை விண்ணில் இருந்து கொண்டே சேகரிக்கவும், சந்திரனின் மேற்பரப்பில் மோதி அதன் போது பெறப்படும் மாதிரிகளில் இருந்து தகவல்களைச் சேகரிக்கவும் என்று இரு வேறு நோக்கங்களோடு இரண்டு விண்கலங்களை ஒரு உந்துகணையைப் (Atlas V) பாவித்து சந்திரனை நோக்கி விண்ணில் ஏவியுள்ளது.

மேற்படி இரண்டு விண்கலங்களில் Lunar Reconnaissance Orbiter (LRO) எனும் விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர்கள் தொலைவில் சஞ்சரித்துக் கொண்டு, அதில் உள்ள 6 பிரதான உபகரணங்களைப் பாவித்து சந்திரன் மேற்பரப்புப் பற்றிய தகவ்களை துல்லியமாகத் திரட்டி நாசாவின் எதிர்கால சந்திரனுக்கான பயணங்களுக்கு அவசியமான தகவல்களை வழங்கும் என்றும் மற்றைய விண்கலம் Lunar Crater Observation and Sensing Satellite (LCROSS) 2200 கிலோகிராம் எடையுள்ள பொருளை சந்திரனோடு 9000 கிலோமீற்றர்கள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் மோத விட்டு அதிலிருந்து பெறப்படும் தூசிகளை மற்றும் மாதிரிகளை ஆராய்ந்து அங்கு நீர், பனிக்கட்டி, நீராவி அல்லது நீரேற்றப்பட்ட கனிமங்கள் அல்லது காபன் சார் சேதன இரசாயனங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய இருக்கிறதாம்.

ஏலவே இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் சந்திரனுக்கு ஆளற்ற விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வரும் நிலையில் நாசாவும் மீண்டும் சந்திரன் நோக்கி தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இது புதியதொரு நட்சத்திரப் போர்த்திட்டத்திற்கு வழிவகுக்காமல் விண்வெளியை உபயோகமான பாதையில் பாவிக்க அனுமதிப்பின் அது அறிவியல் உலகுக்கு ஒரு அனுகூலமான விடயமாக அமையும் என்பதை எதிர்பார்க்கலாம்.

No comments: