மாசுக்களால் பூமி வெப்பமயம்: ஆண்டுக்கு 3 லட்சம் பேர் பலி

உலகம் வெப்பமயமாகி வருவதால் ஏற்படும் பேரழிவுகளால் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தொழிற்சாலை, வாகனப்புகை உட்பட பல்வேறு மாசுக்களால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது.இதனால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அனல் காற்று வீசுவதும், புயல், சூறாவளி தாக்குதல், காட்டுத் தீ போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரித்துள்ளன.

வெப்பமயம் பற்றி ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தலைமையிலான "உலக மனிதநேய அமைப்பு" முதல்முறையாக விரிவான ஆய்வு நடத்திய அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், வெப்பமயத்தால் ஏற்படும் பின்விளைவுகளால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு 3 லட்சம் பேர் இறப்பதாகவும், ஆண்டுக்கு 30 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநிலை நீடித்தால், 2030ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமயத்தால் ஏற்படும் பேரழிவுகளால் இறப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன்படி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 லட்சமாக உயரும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

பருவநிலை மாற்றத் தால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

அறிக்கையை தாக்கல் செய்து கோபி அன்னன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பருவநிலை மாற்றத்தால் மனித இனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை இனிமேலும் அலட்சியப்படுத்த முடியாது. இப்போது நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக உலகளவில் உடனடியாக விவாதித்து மனித இனத்தை காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு கோபி அன்னன் கூறினார்

No comments: