வெளியுலகுடனான விவகாரங்களைக் கையாளுவதில் அமெரிக்கா இதுகாலவரை கடைப்பிடித்து வரும் கொள்கைகளிலும் அணுகு முறைகளிலும் கணிசமான மாறுதல்களைப் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிருவாகத்தின் கீழ் காணக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உலக மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. உலகினால் பெரிதும் வெறுக்கப்பட்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதி என்ற அபகீர்த்திக்குள்ளான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் கடைப்பிடித்த ஒரு தலைப்பட்சமான ஆக்கிரமிப்புத்தனமான கொள்கைகளின் விளைவாக உலக அரங்கில் அமெரிக்கா இழந்து போன தார்மீகச் செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஒபாமாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெறுகின்ற போர்களைப் பொறுத்தவரை, சடுதியாக எந்தவொரு பாரிய மாறுதலையும் கொண்டு வருவதற்கு ஒபாமா நிருவாகத்தினால் முடியவில்லை என்ற போதிலும் வெளியுறவு விவகாரங்களில் ஏனைய பிராந்தியங்களில் அமெரிக்கா கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கும் அணுகுமுறையில் ஓரளவுக்கு சாதகமான அம்சங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. கியூபாவுடன் "புதிய ஆரம்பமொன்றையும்' அமெரிக்கக் கண்டத்தில் உள்ள சகல நாடுகளுடனும் "சமத்துவமான கூட்டுப் பங்காண்மையையும்' அமெரிக்கா நாடுகிறது என்று டிரினிடாட்டில் நடைபெறும் அமெரிக்க அரசுகளின் உச்சி மகாநாட்டில் லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் தலைவர்கள் மத்தியில் ஒபாமா தெரிவித்திருக்கும் கருத்து முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். இந்த உச்சி மகாநாட்டுக்கு போவதற்கு முன்னர் கடந்த வாரம் ஒபாமா கியூப வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கப் பிரஜைகள் கியூபாவுக்கு பயணம் செய்வதற்கு இதுகாலவரை விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியதுடன் கியூபாவில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு இந்த அமெரிக்கப் பிரஜைகள் முன்னரைவிட மிகவும் எளிதாகப் பணத்தை அனுப்புவதற்கும் அனுமதித்திருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் சிறிய வையானாலும் சாதகமானவை என்று கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ வர்ணித்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ அமெரிக்கக் கண்டத்திலேயே ஒரேயொரு கம்யூனிஸ்ட் அரசாக கியூபாவை மாற்றிய பிறகு அமெரிக்கா தடைகளை விதித்தது. காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவுடன் 1960 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர உறவுகளைப் பேணவில்லை. அதேவருடம் கியூபா மீது விதிக்கப்பட்ட வர்த்தகத்தடையை அடுத்தடுத்துவந்த அமெரிக்க நிருவாகங்கள் மேலும் தீவிரப்படுத்தியிருந்தன. கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்துவதையே இலக்காகக்கொண்டு அமெரிக்கா செயற்பட்டு வந்தது. இதில் காஸ்ட்ரோவைக் கொலைசெய்வதற்கான பல்வேறு முயற்சிகளும் அடங்கும்.
முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷின் நிருவாகம் கியூபாவின் எதிரணியினரை ஆதரித்து கம்யூனிஸ்ட் ஆட்சியின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் நோக்குடனான கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடித்தது. ஆனால், அமெரிக்க நிருவாகங்களினால் இது விடயத்தில் வெற்றிபெற முடியவில்லை. டிரினிடாட் உச்சி மாகாநாட்டுக்கு செல்வதற்கு முன்னதாக டொமினிக்கன் குடியரசுக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கியூபா தொடர்பான அமெரிக்கக் கொள்கை தோல்வியடைந்து விட்டது என்று பகிரங்கமாகவே ஒத்துக் கொண்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
கியூபா தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அறிவிப்புக்களை ஒபாமா வெளியிட்டதன் நோக்கம் கியூபாவில் ஜனநாயகத்தையும் மனிதஉரிமைகளையும் மேம்படுத்துவதே என்று வெள்ளைமாளிகை தெரிவித்திருக்கிறது. 82 வயதான பிடல் காஸ்ட்ரோ கூறியிருப்பதைப் போன்று ஒபாமா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மிகவும் சிறியவையே. கியூப வம்சாவளியினரான அமெரிக்கப் பிரஜைகள் கியூபாவுக்கு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, ஏனைய அமெரிக்கர்கள் கியூபாவுக்கு செல்ல முடியாதவாறு தடை தொடருகிறது. அத்துடன் சுமார் அரை நூற்றாண்டுகளாக கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் மனிதாபிமான மற்ற பொருளாதாரத் தடைகளில் எந்த மாற்றமுமே இல்லை.
கடந்த வாரம் தன்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு கியூபா அரசாங்கத்தினால் செய்யப்படக் கூடிய கைமாறைப் பொறுத்தே மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைப் பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தனது நிருவாகம் தயாராயிருக்கும் என்று ஒபாமா கூறுகிறார். கியூபா மக்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதையோ அமெரிக்காவுடனான வர்த்தகத்தையோ கம்யூனிஸ்ட் அரசாங்கம் தடைசெய்திருக்கவில்லை. அதனால் கியூபாவிடமிருந்து ஒபாமா நிருவாகம் எதிர்பார்க்கும் கைமாறு என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை.
பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூபா புரட்சி வெற்றி பெற்ற நாள் முதலாக கியூபா மக்கள் எத்தகைய அரசாங்கத்தை, எத்தகைய சமூக அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தொடர்பில் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கட்டளையிடுவதில் தங்களுக்கு இருக்கும் விருப்பத்தை அமெரிக்க நிருவாகங்கள் ஒரு போதுமே ஒளித்ததில்லை. கியூபா மீதான வாஷிங்டனின் நெருக்குதல்கள் ஆக்கிரமிப்பு வடிவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட கிளர்ச்சிகளின் வடிவில் எல்லாம் வந்துபோயிருக்கின்றன. ஆனால், எதிலுமே அமெரிக்காவினால் வெற்றி பெறமுடியவில்லை.
இந்த அனுபவத்தில் இருந்து ஒபாமா நிருவகம் உகந்த பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. கியூபா அரசாங்கம் அதன் சமூகத்தை திறந்துவிட வேண்டும் என்பதே வாஷிங்டனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மனித உரிமைகள், அரசியல் கைதிகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் உட்பட சகல விடயங்கள் குறித்தும் அமெரிக்காவுடன் பேசத் தயாராயிருப்பதாக கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோவும் அறிவித்திருக்கிறார்.
கியூபா தொடர்பான அமெரிக்கக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் கியூபாவுடன் புதியதொரு ஆரம்பத்தை நாடுவதாக அறிவித்திருக்கும் ஒபாமா, கம்யூனிஸ்ட் நாட்டுடனான உறவுகளில் ஆக்கபூர்வமான யுகமொன்றை ஆரம்பிப்பதில் மானசீகமான அக்கறையுடையவராக இருந்தால் பொருளாதாரத் தடைகள் உட்பட சகல கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்கவேண்டும். அத்துடன் தங்களை எத்தகைய அரசாங்கம் ஆளவேண்டும் என்பதையும் தங்கள் சமூக அமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டுமென்பதையும் தீர்மானிக்கும் பொறுப்பை கியூபாவின் மக்களிடமே விட்டுவிட வேண்டும்.
- நன்றி தினக்குரல் -
No comments:
Post a Comment