பேஸ்புக்கிற்கு போட்டியாக "கூகுள் பிளஸ்"....!


கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக "கூகுள் பிளஸ்" என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.

இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவலுக்கு


No comments: