பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.
எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.

சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக்கும்.

அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையில் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவதும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.

இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது. எனவே, இவர்கள் தம்மையே சுய பரிசோதனை செய்துகொண்டு, தாம் இந்தப் பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி?

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!

முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.

ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள். 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.

காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.

தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை ப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.

உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர்மறையாக விமர்சிக்கும், கேலி செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச்சிந்தனை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுடன் உங்கள் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள்.

அழகாக, கம்பீரமாக உடையணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கையில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.

தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது. நீங்களாகவே பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப் பகிர்ந்துகொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவலகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்திப்பாருங்கள்.

கொஞ்ச நாளில் 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone' என்பீர்கள்

No comments: