தென் கொரியாவில் இருக்கும் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உலகின் முதல் `குளோனிங்' நாய்க் குட்டியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இதற்கு `ரப்பி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் 4 நாய்க் குட்டிகளும் இதனுடன் பிறந்துள்ளன.
ரப்பியும் மற்ற நாய்க்குட்டிகளும் புற ஊதா வெளிச்சத்தில் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. இதற்கு அவற்றின் தோலிலும், உரோமங்களிலும் இருக்கும் ஒரு விதமான புரோட்டீன் தான் காரணம்.
மனிதனுக்கு உண்டாகும் பல நோய்களுக்கான மருந்து, அவற்றின் தன்மை போன்றவற்றை நாய்களின் மூலம் சோதனை செய்யும் வழக்கம் ஏற்கனவே இருந்து வருகிறது. புற்றுநோய் ஆராய்ச்சியில் இந்தப் புதிய `குளோனிங்' வரவுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாய்களின் கருமுட்டையை எடுத்து அதில் ஒரு வைரஸ்ஸை ஊடுருவச் செய்தார்கள். அந்த வைரஸ், ஒளிரக் கூடிய ஒரு மரபணுவை கருமுட்டையின் உட்கருவில் இணைத்தது. இந்த உட்கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்தார்கள். மற்றொரு நாயின் கருமுட்டையில் இருக்கும் உட்கருவை நீக்கிய பின் அதனுள் தனியே பிரித்து எடுக்கப்பட்ட உட்கருவை உட் செலுத்தினார்கள். பின் இந்தக் கரு முட்டையையும் வெளியே எடுத்து ஒரு வாரகாலத்திற்கு சோதனைச் சாலையில் வைத்திருந்தார்கள். அதற்குப் பின்னால் இந்தக் கருமுட்டையை வேறொரு நாயின் கருப்பையில் விதைத்தார்கள்.
இந்த முறையில் சுமார் 344 கருமுட்டைகள் 20 நாய்களின் கருப்பைகளில் விதைக்கப்பட்டன. பெரும்பாலான கருக்கள் வளராமல் போனாலும் 7 கருக்கள் மட்டும் உருவாகின. அவற்றில் ஒரு கரு முழுவதும் வளர்வதற்கு உள்ளாகவே அழிந்துவிட்டது. மற்றொரு கரு வளர்ந்து நாய்க்குட்டியாகப் பிறந்து சில வாரங்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனது. கடைசியில் 5 நாய்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. 5 நாய்களும் தற்போது ஆரோக்கியமாக துள்ளிக் குதித்து விளையாடி காண்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வருகின்றன.
எலி போன்ற மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இருப்பது போலவே நாய்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக உள்ளன. எனவே அவற்றை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது.
தென்கொரியாவைச் சேர்ந்த இதே ஆராய்ச்சியாளர்கள் தான் `குளோனிங்' மூலம் உருவாக்கப்பட்ட `ஸ்னப்பி' என்ற பெயருள்ள உலகின் முதல் நாயை கடந்த 2005-ம் வருடம் உருவாக்கி சாதனை படைத்தார்கள். அதற்கும் மேலாக, தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்க்குட்டிகளையும் `குளோனிங்' முறையில் உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment