உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. மூளைசுருக்கம் ஏற்படுவதோடு, உயிரணுக்களின் செயல்பாடுகளும், ஒரு விடயத்தை பற்றி தொடர்ச்சியான சிந்தனையில் எண்ணி பேசும் திறனும் குறைகின்றன. மனதை எப்போதும் செயல்பாட்டில் இருக்க செய்யவும், மூளையை நலமுடனும், தொடர்ச்சியான எண்ண செயல்பாடுகளோடும் இயங்கசெய்யவும் சில சிறிய செயல்பாடுகள் போதுமானவை. இதற்காகவே முன்பு குறுக்குசொல், புதிர் போன்ற சில விளையாட்டுகள் உதவின. தொழில்நுட்ப வளர்ச்சி காலக்கட்டமான இக்காலத்தில், மனித மூளையின் நலமான செயல்பாடுகளுக்கு இணையத்தள வசதி ஏற்படுத்தும் செல்வாக்கை மதிப்பிடும் வகையில் அறிவியலாளர்கள் ஆராய தொடங்கினர். இணையதள தேடுதலையும் மூளையின் செயல்பாடுகளையும் இணைத்து நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுவாகும். இது வயதானோரின் மனநோயியல் அமெரிக்க இதழில் வெளிவந்துள்ளது.
லாஸ்ஏஞ்சல்ஸ் கலிபோர்னிய பல்கலைக்கழகக் குழு நடத்திய இவ்வாய்வுக்காக, நரம்பியல் ரீதியில் நலமான, 55 லிருந்து 76 வயதான 24 பேர் முன்வந்தனர். அதிலுள்ள பாதிபேருக்கு இணையத்தில் தகவல் தேடி பெற்ற அனுபவம் இருந்தது. மற்றவருக்கு அவ்வனுபவம் இல்லை. இந்த இரண்டு குழுக்களிலும் இணையதளத்தில் தேடிய அனுபவம் பெற்றிருந்த குழு தான் மூளையின் செயல்பாட்டில் மிகப் பெரிய வேறுபாட்டை காட்டியது. ஆய்வில் ஈடுபட்ட அனைவரும் புத்தகம் ஒன்றை வாசிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு அனைவரும் ஒரே செயல்பாட்டில் பங்கெடுத்தபோது, வழக்கமாக செயல்படும் மூளையின் பகுதி எல்லோருக்கும் செயல்பட்டது. ஆனால் இணையதளத்தில் அனுபவம் கொண்டிருந்தவர்களின் மூளையின் முன்பகுதி, நரம்புடன் தொடர்புடைய மற்றும் அதன் மேற்புறப்பரப்பு ஆகியவற்றிலும் அதிக செயல்பாடுகள் பதிவாகின.
இதிலிருந்து இணையதள தேடுதலில் அனுபவம் கொண்டவர்களிடத்தில் வழக்கமாக புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படுவதற்கு மேலான, அதிக அளவிலான நரம்பு மண்டல செயல்பாடுகள் காணப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் இணையத்தில் தேடிய அனுபவம் இல்லாதவர்களை விட இரண்டு மடங்குக்கு அதிகமான மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்தனர். இவ்வாறு பதிவான மூளை செயல்பாடுகளின் அளவீட்டை voxel என மதிப்பிட்டனர். இணைய தளத்தில் தேடிய அனுபவம் கொண்டவர்கள் 21,782 வோசெல் செயல்பாடுகளை பதிவு செய்தபோது, பிறர் வெறும் 8,646 வோசெல் செயல்பாடுகளையே பதிவு செய்தனர்.
இந்த ஆய்வை பற்றி, அதன் மிக முக்கிய ஆய்வாளரும், லாஸ்ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசியருமான Gary Small பேசுகின்றபோது, ஆய்வின் முடிவுகள் ஊக்கமூட்டுவதாகவும், வளர்ந்துவரும் கணினி தொழில்நுட்பங்கள் நடுத்தர மற்றும் முதிய வயதினருக்கு உடல் மற்றும் உள்ளார்ந்த பயன்களை கொண்டு வருகிறது என்றும், இணையத்தில் தேடுவது, மூளையின் இயக்கத்தை தூண்டுகின்ற செயல்பாடுகளை தொடர செய்கின்றது என்றும் தெரிவித்தார்.
வயதாகும்போது புதிய மொழி ஒன்றை கற்றால், நினைவாற்றல் வளர்வதோடு மூளையின் செயல்பாடும் உயர்வதாக முன்பு அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு மூளையின் செயல்பாட்டை இணையதள தேடுதலும் வளர்க்கும்மென்றால் கணினி மற்றும் இணைய வசதி தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைவது கண்கூடு.
No comments:
Post a Comment