2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்...!

2013 ஆம் ஆண்டு சூரியனில் ஏற்படும் பாரிய வெடிப்பொன்றினால் வெளிவரக்கூடிய பாரிய தீச்சுவாலைகள் காரணமாக பூமியில் மின் விநியோகம் முதலானவை தடைப்பட்டு பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் நேற்று எச்சரித்துள்ளனர்.

நூறு வருடங்களுக்கு ஒரு தடவை இத்தகைய பாரிய வெடிப்பு சூரியனில் ஏற்படலாம் எனவும் இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படுவதுடன் தொலைதொடர்புத்துறை செயலிழப்பு, விமானங்கள் பறக்க முடியாத நிலை, இணையத்தளங்கள் செயலிழப்பு போன்றன ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றிய பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், அண்மைக்காலத்தில் 1859ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்டதற்கு ஒப்பான அளவில் பாரிய வெடிப்பொன்று மீண்டும் ஏற்பட்டால் அளவிட முடியாத சேதங்கள் ஏற்படலாம் என கூறினார்.

தொழில்நுட்பத்தில் தங்கியுள்ள நவீன சமூகம் இத்தகைய தாக்கங்களால் அதிக பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக உள்ளது எனவும் இத்தகைய நாசங்களுக்கு எதிரான தந்திரோபாயங்களை விஞ்ஞானிகள் வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு : நாசா தகவல்!!

"பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள "தெர்மோஸ்பியர்' அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.வளிமண்டலம் முடிந்து விண்வெளி ஆரம்பிக்கும் பகுதியில் தெர்மோஸ்பியர் அடுக்கு அமைந்துள்ளது.சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் தெர்மோஸ்பியர் அடுக்கு பெரும்பங்கு வகிக்கிறது.சமீப காலமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு மற்றும் புறஊதாக்கதிர்களின் பாதிப்பால் தெர்மோஸ்பியர் அடுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இதனால் பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடல்சார் ஆய்வுக்கழக விஞ்ஞானி ஜான் எம்மர்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை:பூமியின் வளிமண்டலத்தில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீரென கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எங்களது ஆய்வில் வளி மண்டல அழுத்தம் திடீரென முப்பது சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.தெர்மோஸ்பியர் அடுக்கு சூரியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும்.பூமியின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தெர்மோஸ்பியர் அடுக்கில் பரவி விரிவடைகிறது.இதை தெர்மோஸ்பியர் அடுக்கு, பூமிக்கு வராமல் தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் வெப்பத்தின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த 2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை தெர்மோஸ்பியர் அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வளிமண்டலத்தை தாண்டி தெர்மோஸ்பியர் அடுக்கு வரை பரவி விட்டது.

எனவே தெர்மோஸ்பியர் அடுக்கில் கார்பன் டை ஆக்சைடு குளிரூட்டியாக செயல்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த பாதிப்பிற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு மட்டும் காரணம் என கூற இயலாது.பிற காரணிகளும் தெர்மோஸ்பியர் அடுக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ஜான் எம்மர்ட் கூறினார்.